வேடசந்தூர் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி கொலையா? போலீஸ் விசாரணை


வேடசந்தூர் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 Sept 2017 4:15 AM IST (Updated: 1 Sept 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே தண்டவாளத்தில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள கரையாம்பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (29). கூலித்தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று இவர், எரியோடு ரெயில்நிலையம் அருகே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக நடந்து சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து அவர்கள் திண்டுக்கல் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்டவாளத்தில் இறந்து கிடந்த ராஜசேகரின் உடலின் தலை, இடுப்பு பகுதிகளில் காயங்கள் இருந்தன. ரெயில் மோதினால் அவருடைய உடல் சிதறியிருக்கும். ஆனால் அதுபோன்ற அறிகுறி எதுவும் தென்படவில்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படுத்தியுள்ளது. எனவே அவரை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் போட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

இல்லையெனில் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story