மாசு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சோதனைக்காக கடல் நீர் சேகரிப்பு


மாசு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய சோதனைக்காக கடல் நீர் சேகரிப்பு
x
தினத்தந்தி 1 Sept 2017 5:00 AM IST (Updated: 1 Sept 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

மாசு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய சோதனைக்காக கடல் நீரை அறிவியல் தொழில்நுட்பத்துறை ஆய்வக உதவியாளர்கள் சேகரித்தனர்.

புதுச்சேரி,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 25-ந் தேதி கொண்டாடப்பட்டது. புதுவையிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சதுர்த்தி பேரவை சார்பில் கடந்த 29-ந் தேதி நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்யும் ரசாயன பொருட்களால் சிலைகளை பயன்படுத்தக் கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்தது. ஆனாலும் பலர் இந்த உத்தரவுகளை மீறி ரசாயன சிலைகளை பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இந்த சிலைகள் கடலில் கரைக்கப்படுவதால் கடல் நீர் மாசடைவது அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின்படி ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு 1 வாரத்திற்கு முன்பும், சிலைகள் கரைக்கப்படும் அன்றும், சிலைகளை கரைத்த சில நாட்கள் கழித்தும் கடல் நீரின் தன்மை குறித்து சோதனை செய்யப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று காலை புதுவை அறிவியல் தொழில் நுட்பத்துறை ஆய்வக உதவியாளர்கள் தமிழரசன், ஆனந்தன், சத்தியமுருகன் ஆகியோர் புதுவை கடற்கரையில் கடல்நீரை சோதனைக்காக ஒரு கேனில் சேகரித்தனர். அந்த நீரை அவர்கள் 15 நாட்களுக்குள் சோதனை செய்து அதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த முடிவுகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு விநாயகர் சிலைகளை வழிபாடு நடத்துவது தொடர்பாக கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story