ஏரல் அருகே துணிகரம்: தொழில் அதிபர் வீடு புகுந்து 64 பவுன் தங்க நகைகள் கொள்ளை


ஏரல் அருகே துணிகரம்: தொழில் அதிபர் வீடு புகுந்து 64 பவுன் தங்க நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 1 Sept 2017 4:17 AM IST (Updated: 1 Sept 2017 4:17 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது வீடுபுகுந்து 64 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஏரல்,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள உமரிக்காடு ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் அருள் கிருஷ்ணன் (வயது 29). தொழில் அதிபரான இவர் சென்னை வேளச்சேரி பள்ளிகரணை பாலாஜி நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் கட்டிடம் கட்ட சாரம் அமைப்பதற்கு தேவையான இரும்பு கம்பிகள், மர கம்புகள், பலகைகளை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இவருடைய மனைவி சந்திர மேகலா(27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உமரிக்காட்டில் நடந்த கோவில் கொடை விழாவில் கலந்து கொள்வதற்காக அருள்கிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் கோவிலில் சப்பர பவனி முடிந்தவுடன், அருள் கிருஷ்ணன் குடும்பத்தினர் தங்களது வீட்டுக்கு திரும்பி சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் தாங்கள் அணிந்து இருந்த தங்க நகைகளை கழற்றி, துணிப்பையில் வைத்து விட்டு தூங்கினர். அப்போது அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நைசாக அருள்கிருஷ்ணனின் வீட்டுக்குள் புகுந்து துணிப்பையில் இருந்த 64 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்றனர். காலையில் கண்விழித்து பார்த்த சந்திரமேகலா தனது துணிப்பை திறந்த கிடந்ததையும், அதில் இருந்த தங்க நகைகள் கொள்ளை போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கொள்ளைபோன தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.13 லட்சம் ஆகும்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஏரல் போலீஸ் நிலையத்தில் அருள் கிருஷ்ணன் புகார் செய்தார். உடனே ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீஸ் மோப்ப நாய் ‘ஜியோ‘ வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டை மோப்பம் பிடித்து விட்டு, அங்குள்ள தாமிரபரணி ஆற்றங்கரை வரையிலும் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் ராமர், கொள்ளை நடந்த இடத்தில் பதிவான தடயங்கள், கைரேகைகளை பதிவு செய்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து 64 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

உமரிக்காட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வீடு புகுந்து 64 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story