குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆபாச நடனத்துக்கு தடை ஆலோசனை கூட்டத்தில் முடிவு


குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் ஆபாச நடனத்துக்கு தடை ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 1 Sept 2017 4:32 AM IST (Updated: 1 Sept 2017 4:35 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு ஆபாச நடனமாட தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, தசரா குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குலசேகரன்பட்டினம்,

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. 10-ம் திருநாளான 30-ந்தேதி இரவில் சூரசம்ஹாரம் நடக்கிறது. விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களை அணிந்து, காணிக்கை வசூலித்து கோவிலில் செலுத்துவார்கள்.

விழாவையொட்டி குலசேகரன்பட்டினம் தனியார் மண்டபத்தில் தசரா குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் தசரா குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தசரா திருவிழாவை முன்னிட்டு, குலசேகரன்பட்டினத்தில் சினிமா பாடல்களுக்கு ஆபாச உடை அணிந்து நடனம் ஆடுவதை தடை செய்ய வேண்டும். சாதி பெயர் பொறித்த பேனர்கள், தொப்பிகள், பனியன்கள், டி-சர்ட்டுகளை பயன்படுத்த கூடாது. சாதி பெயரில் கோஷங்களை எழுப்ப கூடாது. வருகிற 29-ந்தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி வரையிலும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். தசரா திருவிழாவுக்கு முன்பாக குலசேகரன்பட்டினத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். சாலையோரங்களில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும். 1-ம் திருநாள், 10, 11 ஆகிய திருநாட்களில் ஒருவழிப்பாதையை அமல்படுத்த வேண்டும்.

சரக்குகள் ஏற்றி செல்லும் வாகனங்களில் பக்தர்களை ஏற்றி செல்ல கூடாது. மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தடை செய்ய வேண்டும். பக்தர்கள் குடும்பத்தினருடன் எளிதில் சாமி தரிசனம் செய்யும் வகையில், கோவில் நிர்வாகம், காவல் துறையினர் எடுக்கும் நடவடிக்கைககளுக்கு தசரா குழுவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விரதம் இருக்கும் பக்தர்கள் எந்த வேடம் அணிந்தாலும் கண்டிப்பாக முகத்தில் பவுடர் பூச வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story