பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து எலக்ட்ரீசியன் பலி


பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து எலக்ட்ரீசியன் பலி
x
தினத்தந்தி 1 Sept 2017 4:52 AM IST (Updated: 1 Sept 2017 4:52 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி அருகே பாலப்பணிக்காக சாலையில் தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் விழுந்து எலக்ட்ரீசியன் பரிதாபமாக இறந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயம் அடைந்தார்.

ஆரல்வாய்மொழி,

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம், மங்காண்டியை சேர்ந்தவர் நவீன் பிரபாகர் (வயது 34). டிப்ளமோ படித்துள்ளார். இவரது நண்பர் திட்டுவிளை, வீரவிளை காலனியை சேர்ந்த வர்ஜின் (25). இவர்கள் இருவரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்தம் அடிப்படையில் எலக்ட்ரீசியன்களாக வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை 4 மணியளவில் வர்ஜின், மங்காண்டியில் உள்ள நவீன் பிரபாகர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து நவீன் பிரபாகரின் மோட்டார் சைக்கிளில் இருவரும் கூடங்குளம் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை நவீன் பிரபாகர் ஓட்டி சென்றார்.

இருவரும் அதிகாலை 4.30 மணியளவில் செண்பகராமன்புதூர் கல்லுப்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அந்த பகுதியில் பாலப் பணிக்காக சாலையின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

அதிகாலையில் இருள் சூழ்ந்து இருந்ததால், சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை இவர்கள் கவனிக்கவில்லை. இதனால், இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் விழுந்தது. அப்போது, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நவீன் பிரபாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் வர்ஜின் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
அதிகாலைநேரம் என்பதால் அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் குறைவாக இருந்தது. விடிந்ததும், அந்த வழியாக சென்றவர்கள் விபத்து நடந்தது குறித்து ஊருக்குள் சென்று பொதுமக்களிடம் கூறினர். உடனே, பொதுமக்கள் விரைந்து வந்து படுகாயமடைந்த வர்ஜினை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஹரிகரன், குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று நவீன் பிரபாகர் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்த நவீன் பிரபாகருக்கு, ஷைனி என்ற மனைவியும், 1½ வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

நவீன் பிரபாகர் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்பவர் நெஞ்சை கரைக்கும் வண்ணம் இருந்தது.
செண்பகராமன்புதூரில் நேற்று முன்தினம் ஓடையில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து சுரேஷ்குமார் என்பவர் பலியானார்.

மீண்டும் அதே பகுதியில் நடந்த விபத்தில் எலக்ட்ரீசியன் பலியாகி இருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story