கலசப்பாக்கம் அருகே கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மாத குழந்தை உள்பட 4 பேர் பலி
கலசப்பாக்கம் அருகே கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கலசப்பாக்கம்,
இந்த நிலையில் நேற்று காலை சரிதா தனது கணவர், குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் மொத்த குடும்பத்தினரும் கடலாடி அருகே உள்ள புதூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
அப்போது கோவிலுக்கு செல்லும் வழியில் கடலாடி காலனி அருகே வந்தபோது அங்குள்ள உறவினர் வீட்டில் தண்ணீர் குடிப்பதற்காக சாலையோரம் உள்ள மரத்தடியில் அனைவரும் நின்றனர். இதையடுத்து சங்கர், சின்னப்பையன், சிவலட்சுமி ஆகியோர் ரோட்டை கடந்து தண்ணீர் எடுத்து வர சென்றனர்.
அப்போது போளூரில் இருந்து செங்கம் நோக்கி வந்த கார் மரத்தடியில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது திடீரென மோதியது. இதில் படுகாயம் அடைந்த மணி, மதனா, சரிதா மற்றும் சரிதாவின் 2 மாத ஆண் குழந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் இதுகுறித்து கடலாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார் சம்பவ இடத்தில் உயிரிழந்த 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் மற்றும் காரில் வந்தவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்து நடைபெறுவதற்கு முன்பு சரிதா தனது மகள் மோனிகாவுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர்களை நோக்கி கார் வேகமாக வருவதை கண்டதும் சரிதா தனது மகள் மோனிகாவை காரில் சிக்காமல் இருக்க தள்ளி விட்டார். இதனால் மோனிகா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சரிதா விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
விபத்து நடைபெறுவதற்கு முன்பு சின்னப்பையன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வருவதற்காக உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் தண்ணீர் எடுத்து கொண்டு மனைவி இருக்கும் இடத்திற்கு அருகில் வரும் போது, அவரது கண் முன்னே விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் கையில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரத்தை தூக்கி எறிந்து விட்டு மனைவி அருகில் ஓடி சென்று கதறி அழுதார். மேலும் உயிரிழந்த 2 மாத கைக்குழந்தையையும் கையில் வைத்து அழுதார். இது காண்பவர் கண்களை குளமாக்கியது.