விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை கையாள வேண்டும்
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாண்டு தங்களது வருமானத்தை இரட்டிப்பாக்க முன்வர வேண்டும் என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.
விருதுநகர்,
அருப்புக்கோட்டை தாலுகா கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கான “சபதம் மூலம் சாதிப்போம், புதிய இந்தியா சிந்தனை(2017–2022)“ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவின் முதுகெலும்காக விளங்கி வருகிறது விவசாயம். வேளாண்மைத்துறையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாண்டு தங்களது வருமானத்தை இரட்டிப்பாக முன்வர வேண்டும். புதிய இந்தியாவைப் படைக்க நாம் அனைவரும் தோளோடு தோள் நின்று அயராது தொண்டாற்றிட வேண்டும் என்ற நோக்கில், தற்போது மத்திய அரசு, மாநில அரசோடு இணைந்து சபதம் மூலம் சாதிப்போம்–புதிய இந்தியா சிந்தனை(2017–2022) நிகழ்ச்சி மூலமாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
விவசாயிகள் நுண்ணீர் பாசனம் மூலம் பயிர் வளத்தை பெருக்குதல், மழைநீர் சேகரிப்பை பின்பற்றுதல், உணவு பதப்படுத்தும் முறை மூலம் மதிப்புக்கூட்டுதல், விவசாய சந்தைப்படுத்துதலில் குறைகளை சரிசெய்தல், விவசாயத்தில் உள்ள இடர்பாடுகளை குறைத்து, வருவாயைப் பெறுவதற்கு பயிர் காப்பீட்டை பின்பற்றுதல், வேளாண் சார்ந்த தொழில்களான கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணை முறை போன்றவற்றை ஊக்குவித்தல் வழிமுறைகளை பின்பற்றி 2022–க்குள் விவசாய வருமானத்தை இருமடங்காக உயர்த்த அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை, கால்நடைத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளையும், தொழில் முனைவோர்களின் அரங்குகளையும், மதிப்புகூட்டப்பட்ட சிறுதானியபயிர்கள் மற்றும் வெப்ப மண்டல பழப்பயிர்களின் அரங்குகளையும் கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார். கோவிலாங்குளம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அளிக்கப்பட்ட வெள்ளாடு வளர்க்கும் பயிற்சி குறித்தும், தேனீ வளர்ப்பில் பெண்களின் பங்கு குறித்த செயல் விளக்கத்தையும், கம்போஸ்டு உரம் தயாரிக்கும் செயல்விளக்கத்தையும் பார்வையிட்டார்.