சின்னமனூரில் பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்
சின்னமனூரில் பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சின்னமனூர்,
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதிகளில் உள்ள குளங்களில் அரசு அனுமதியுடன் கரம்பை மற்றும் வண்டல் மண்ணை விவசாய தேவைக்கு எடுப்பதாக அனுமதி பெற்று அளவுக்கு அதிகமாக அள்ளி வந்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சின்னமனூர் பகுதியில் குமுளி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், விவசாய பயன்பாட்டுக்கு என அனுமதி பெற்று தனியார் முறைகேடாக மண் அள்ளி செல்கிறார்கள். இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். முறைகேடாக மண் அள்ளுபவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், தேனி மாவட்டத்தில் மண் அள்ளப்பட்ட இடங்களில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும், என்றனர்.