முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 2 Sept 2017 3:45 AM IST (Updated: 2 Sept 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பது எப்போது? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி என்பது லோயர்கேம்ப்பில் தொடங்கி பழனிசெட்டிபட்டி வரை ஆகும். இந்த பகுதிகளில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் முல்லைப்பெரியாறு அணை நீரின் மூலம் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. பருவமழை பொய்த்து போனதால் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக இருபோக நெல் சாகுபடி நடைபெறவில்லை.

ஆண்டுதோறும் முதல்போக நெல் சாகுபடிக்காக ஜூன் 1–ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்த்த பருவமழை பெய்யாததாலும் அணையில் போதியளவு நீர்வரத்து இல்லாததாலும் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்தநிலையில் தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 118.60 அடியாக உள்ளது. தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

அணையில் 112 அடி தண்ணீர் இருந்தாலே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசாணை உள்ளது. தற்போது 118 அடியை தாண்டியும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க காலதாமதம் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் கூறும்போது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் பருவமழை பொய்த்ததால் முதல் போக நெல்சாகுபடி தொடர்ந்து தடைபட்டு போனது. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டி விட்டது.

முதல்போக நெல்சாகுபடி செய்ய வேண்டும் என்றால் வருகிற 15–ந் தேதிக்குள் தண்ணீர் திறப்பது அவசியமாகிறது. அப்படியே விவசாயம் செய்தால் நெல் பயிர்களில் நோய்தாக்குதல் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும்.

மேலும் இடைப்பட்ட காலத்தில் ஒரு போக விவசாயம் செய்ய எந்த வகையான நெல் நடவு செய்தால் கூடுதல் மகுசூல் கிடைக்கும் என்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். எனவே முதல்போக நெல் சாகுபடி செய்ய முல்லைப்பெரியாறு அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றனர்.


Next Story