சுள்ளியா அருகே துணிகரம் துர்காபரமேஸ்வரி கோவிலில் பழங்கால சிலை, நகைகள் திருட்டு
சுள்ளியா அருகே துர்காபரமேஸ்வரி கோவிலில் பழங்கால சிலை, நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மங்களூரு,
சுள்ளியா அருகே துர்காபரமேஸ்வரி கோவிலில் பழங்கால சிலை, நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
துர்காபரமேஸ்வரி கோவிலில் திருட்டுதட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா சுப்பிரமணியா போலீஸ் எல்லைக்குட்பட்ட மரக்கதா பகுதியில் பிரசித்தி பெற்ற துர்காபரமேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரி, கடந்த மாதம் (ஆகஸ்டு) 31–ந் தேதி இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில், நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பழங்கால சாமி சிலைகள், தங்கநகைகள் மற்றும் பூஜைப்பொருட்களை திருடி சென்று விட்டனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் பூசாரி வழக்கம்போல கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.10 லட்சம் மதிப்பிலான...பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் இருந்த பழங்கால சாமி சிலைகள், தங்க நகைகள், பூஜை பொருட்கள் மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து சாமி சிலைகள், தங்க நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவிலின் பூசாரி, சுப்பிரமணியா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கோவிலுக்குள் இருந்த கண்காணிப்பு கேமராவை மர்மநபர்கள் உடைத்து சென்றிருந்தது தெரியவந்தது.
மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சுஇதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால், யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்துகொண்டனர். இதுகுறித்து சுப்பிரமணியா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.