மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் முத்தரசன் குற்றச்சாட்டு


மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Sept 2017 6:15 AM IST (Updated: 2 Sept 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல்,

அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா நேற்று துயரமான முடிவை எடுத்துவிட்டார். ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த அனிதாவின் தாய் ஏற்கனவே இறந்துவிட்டார். அவருடைய தந்தை, திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். அனிதா சிறுவயதிலேயே மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தார்.

இதற்காக நன்றாக படித்த அவர் பிளஸ்–2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால் ‘நீட்’ தேர்வு அனிதாவின் கனவை தகர்த்துவிட்டது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்.

ஆனால், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழக அரசு முழு முயற்சி எடுக்கவில்லை. பதவியை தக்க வைக்கவும், பணம் சம்பாதிக்கவுமே முயற்சி எடுத்து வந்தனர். இதன்காரணமாக மத்திய, மாநில அரசுகளை நம்பியிருந்த தமிழக மாணவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

‘நீட்’ தேர்வினால் தனக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததை நினைத்து மன உளைச்சலில் இருந்த அனிதா தற்கொலை முடிவை எடுத்துள்ளார். இவருடைய தற்கொலைக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாநில அரசும் தான் காரணம். மாணவர்கள் யாரும் இதுபோன்ற தவறான முடிவை எடுக்க வேண்டாம்.

சமூக நீதியில் அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை தொடர்ந்து போராட வேண்டும்.

அ.தி.மு.க. கட்சியில் பல பிரச்சினைகள் இருக்கலாம். அது அவர்களின் உள்கட்சி விவகாரம். ஆனால், ஆளும் கட்சியில் பல பிரிவுகள் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல. இதை தனக்கு சாதகமாக்கி, தமிழகத்தை வசப்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு செயலிழந்து, கோமா நிலைக்கு சென்று விட்டது. 19 எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்ததும், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது.

உடனே எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும், அல்லது சட்டசபையை கூட்டி பலத்தை காண்பித்து இருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை, கவர்னரும் சட்டசபையை கூட்டி பலத்தை காண்பிக்கும்படி கூறவில்லை. இதுதொடர்பாக நாங்கள் கவர்னரை சந்தித்து பேசியபோது, 19 பேரும் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறார்கள் என்று கூறி அதிர்ச்சி அளித்தார். கவர்னர் மாளிகை அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமாக மாறிவிட்டது.

அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்பது ஊழலுக்கு வழிவகுக்கும். இதை அரசு கைவிட வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளை மக்களிடம் கூறும் வகையில் 10–ந்தேதி வரை மாநிலம் முழுவதும் பிரசார நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் மாநில நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story