ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும் விக்கிரமராஜா பேட்டி


ஜி.எஸ்.டி.யில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வரவேண்டும் விக்கிரமராஜா பேட்டி
x
தினத்தந்தி 2 Sept 2017 4:00 AM IST (Updated: 2 Sept 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி விகிதத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

பழனி,

பழனி அடிவாரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் பழனி நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் கவுரவ தலைவராக கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமாரும், கவுரவ ஆலோசகராக காளிமுத்துவும், தலைவராக தண்டபாணி என்பவரும், செயலாளராக அக்கிம்ராஜாவும், பொருளாளராக பாஸ்கரனும், மக்கள் தொடர்பு அலுவலராக கார்த்திக்கேயனும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக அரசு இன்று (நேற்று) முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுனர் உரிமத்தை (ஒரிஜினல்) கையில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அசல் ஓட்டுனர் உரிமம் தொலைந்து போனால் அதை திரும்ப பெருவதற்கு வாகன ஓட்டிகள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே அரசு தனது உத்தரவை திரும்ப பெற வேண்டும்.

பழனி, திண்டுக்கல் நகர் பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். ஆனால் அந்த பொருட்கள் எதற்காக பறிமுதல் செய்யப்படுகிறது?, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. எனவே அவை அதிகாரிகளால் மறுவிற்பனை செய்யப்படுகிறதோ? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கடைக்காரர்களிடம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கும்படி ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் கேட்பதாக புகார் வந்துள்ளது. அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வைத்துள்ளோம். இது குறித்து அரசிடம் புகார் மனு அளித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வலியுறுத்தப்படும். அதே போல் ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசிடமும் வலியுறுத்தி வருகிறோம். வருகிற 9–ந் தேதி ஐதராபாத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் ஜி.எஸ்.டி.யில் திருத்தம் கொண்டு வருவதாக மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.

அதன்படி திருத்தம் கொண்டுவரப்படவில்லை என்றால், கேரளாவில் வருகிற 20–ந்தேதி நடைபெற உள்ள தென் மாநில அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான முடிவுகள் எடுக்கப்படும். பழனி பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் கடைகள் செயல்பட போலீசார் அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story