சென்னராயப்பட்டணா அருகே மோட்டார் சைக்கிள்–சரக்கு வேன் மோதல்; புதுமாப்பிள்ளை பலி


சென்னராயப்பட்டணா அருகே மோட்டார் சைக்கிள்–சரக்கு வேன் மோதல்; புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 2 Sept 2017 2:00 AM IST (Updated: 2 Sept 2017 1:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னராயப்பட்டணா அருகே மோட்டார் சைக்கிள்–சரக்கு வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.

ஹாசன்,

சென்னராயப்பட்டணா அருகே மோட்டார் சைக்கிள்–சரக்கு வேன் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார். தனது மனைவியை பார்க்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்–சரக்கு வேன் மோதியது

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா கவுடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சேகவுடா. இவரது மகன் மஞ்ஜேஷ் (வயது 28). இவருக்கும் பூமடிஹள்ளி கிராமத்தை சேர்ந்த நிசர்கா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மஞ்ஜேஷ், பெங்களூருவில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர், விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த வாரம் விடுமுறைக்காக சொந்த ஊரான கவுடனஹள்ளிக்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மஞ்ஜேஷ், பூமடிஹள்ளி கிராமத்தில் உள்ள தனது மனைவியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் இரேசாவே பகுதியில் சென்றபோது, அதே சாலையில் வந்த சரக்கு வேன், மஞ்ஜேஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

புதுமாப்பிள்ளை பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மஞ்ஜேஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் இரேசாவே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர், பலியான மஞ்ஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னராயப்பட்டணா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு மஞ்ஜேசின் உடல் அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மஞ்ஜேசின் உடலை பார்த்து அவருடைய மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுகுறித்து இரேசாவே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story