கொருக்குப்பேட்டையில் தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் சாவு
கொருக்குப்பேட்டையில் தேங்கிய மழை நீரில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். மின்வாரியத்தின் அலட்சியப்போக்கை கண்டித்து ஆட்டோ டிரைவரின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராயபுரம்,
சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர், 2–வது தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அமுதா. இவர்களுடைய மகன் வில்வேந்தர் (5).
சிவலிங்கம் நேற்று காலை மகன் வில்வேந்தரை ஆட்டோ மூலம் பள்ளிக்கு அழைத்து சென்றார். பின்பு மகனை பள்ளியில் விட்டு விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வந்தபோது அந்த பகுதியில் தேங்கிய மழை நீரில் திடீரென ஆட்டோ நின்று விட்டது.
இதனால் எதனால் ஆட்டோ நின்றது? என்பதை அறிவதற்காக சிவலிங்கம் அதில் இருந்து கீழே இறங்கினார். அப்போது தேங்கிய மழை நீரின் அருகே உள்ள ஒரு மின்சார பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு, தண்ணீரில் மின்சாரம் பாய்ந்திருந்தது.
இது தெரியாமல் கீழே இறங்கிய சிவலிங்கத்தையும் மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடனடியாக மின்சார பெட்டியின் மின் இணைப்பை துண்டித்தனர்.
இதற்கிடையே மின்வாரியத்தின் அலட்சியத்தால் தான் ஆட்டோ டிரைவர் உயிரிழந்ததாக கூறி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சிவலிங்கத்தின் உடலை வைத்து அவர்கள் மின்வாரியத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.சிவலிங்கம் உடலை கொண்டு செல்ல ஒரு மணி நேரம் கழித்து ஒரு ஆம்புலன்சு வாகனம் வந்தது. ஆனால் அந்த வாகனத்தை அனுமதிக்காமல் பொதுமக்கள் திருப்பி அனுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிவலிங்கம் சாவுக்கு நியாயம் வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் சிவலிங்கத்தின் உடலை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.