வரி உயர்வை கண்டித்து கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர்
வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகராட்சி அலுவலகத்தை தி.மு.க.வினர் முற்றுகையிட்டனர்.
கோவை,
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் புதிய வரி சீராய்வு என்ற பெயரில் வரி உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று காலை நடைபெற்றது. முற்றுகை போராட்டத்துக்கு கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினார்கள். அதன்பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:–
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் வரி சீராய்வு என்ற பெயரில் புதிய வரிகள் போடப்படுகிறது. ஆனால் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மாநகர பகுதிகளில் 15 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகரில் உள்ள தெருக்களில் குப்பைகள் எடுப்பது இல்லை. குப்பைகள் குவிந்து பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மழைநீர் வடிகால்கள் தூர்வாரி சுத்தம் செய்வது இல்லை. இதனால் பல வகையான மர்ம காய்ச்சல்கள் பரவுகிறது. சுகாதார சீர்கேட்டினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவையில் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு செய்த பணிகளுக்கு இன்னும் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் இணைப்புக்கு மீண்டும் டெபாசிட் பெறுதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத கோவை மாநகராட்சிக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், புதிய வரிகளை விதிக்கும் முடிவை மாநகராட்சி உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
முற்றுகை போராட்டத்தில் அவைத் தலைவர் வெ.நா.பழனியப்பன், எஸ்.எம்.சாமி, குறிச்சி பிரபாகரன், பி.நாச்சிமுத்து, முன்னாள் கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், ராஜேந்திரபிரபு, நந்தகுமார் மற்றும் உக்கடம் ஆனந்த், வெங்கடேஷ், பி.ஜி.கோகுல், வி.பி.செல்வராஜ், குனியமுத்தூர் லோகு, கோட்டை அப்பாஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முற்றுகையில ஈடுபட்டவர்கள் கோவை மாநகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
அதன்பின்னர் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதியை சந்தித்து மனு அளித்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். தி.மு.க.வினரின் முற்றுகை போராட்டத்தையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.