சிவகிரி அருகே பெண் கொலை: கேவலமாக என்னை திட்டியதால் கொன்றேன் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்


சிவகிரி அருகே பெண் கொலை: கேவலமாக என்னை திட்டியதால் கொன்றேன் கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:30 AM IST (Updated: 2 Sept 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே நடந்த பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளி, தன்னை கேவலமாக திட்டியதால் அவரை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிவகிரி,

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள விளாங்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இறந்து விட்டார். இவருடைய மனைவி காந்திமதி (வயது 48). விவசாயம் செய்து வந்தார். இவருடைய மகள் கிருத்திகா (24), மகன் கிஷோர் (20). கிருத்திகாவுக்கு திருமணம் ஆகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். கிஷோர் ஈரோட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் கிஷோர் கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்ததும் மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு பூட்டி கிடந்தது. இதனால் வழக்கமாக வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து சாவியை எடுத்து திறந்து வீட்டின் உள்ளே சென்றார். அப்போது அங்குள்ள சமையல் அறையில் வாயில் துணியை திணித்து, கயிறால் கழுத்தை இறுக்கி காந்திமதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த சம்பவம் குறித்து, சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் காந்திமதியின் தோட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் கருப்பையன்(42) என்பவரை கொலை நடந்தது முதல் காணவில்லை. தான் வேலை செய்த வீட்டில் இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் அவர் ஏன் வரவில்லை என்று போலீசாரின் சந்தேகக்கண் அவர் மீது பட்டது. அதனால் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தார்கள்.

கருப்பையனின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் டி.கள்ளிப்பட்டி. கடந்து 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் சிவகிரி அருகே உள்ள செட்டிதோட்டம் கிராமத்தில் தங்கிக்கொண்டு காந்திமதியின் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் செட்டிதோட்டத்துக்கு சென்று கருப்பையனிடம் விசாரிக்க சென்றார்கள். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர்தான் காந்திமதியை கொன்று இருக்கவேண்டும் என்று முடிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தார்கள்.

இதற்கிடையே கரூர் மாவட்டம் அள்ளாளிகவுண்டனூரில் உள்ள உறவினர் வீட்டில் கருப்பையன் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று கருப்பையனை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தார்கள். அப்போது கருப்பையன் காந்திமதியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும் போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலம் விவரம் வருமாறு:–

நான் 15 வருடமாக காந்திமதியின் வீட்டு பண்ணையில் வேலை பார்த்தேன். எந்த வேலையாக இருந்தாலும் தட்டாமல் செய்துவந்தேன். கடந்த வாரம் ஒருநாள் அவர் என்னை அழைத்து வாழைப்பழங்கள் வாங்கிவரச்சொன்னார். நானும் கடைக்கு சென்று வாங்கி வந்தேன். அதில் சில பழங்கள் அழுகி இருந்தன. அதற்கு காந்திமதி என்னை, ‘இவ்வளவு வயதாகிறதே...வாழைப்பழம் கூட சரியாக பார்த்து வாங்கிவரத்தெரியாதா? எந்த வேலைக்கும் நீ லாயக்கு இல்லை‘ என்று கேவலமாக திட்டினார். அவர் சொன்ன வார்த்தைகளை என்னால் பொறுக்கமுடியவில்லை. அவர் மீது எனக்கு தாங்க முடியாத கோபம் ஏற்பட்டது.

இந்தசூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் காலை காந்திமதியின் வீட்டுக்கு சென்றேன். வீட்டில் அவர்மட்டும் இருந்தார். தணியாத ஆத்திரத்தில் இருந்த நான் தனியாக காந்திமதி இருப்பதை பயன்படுத்தி கொல்ல நினைத்தேன். உடனே டீ போட்டு தாருங்கள் என்றேன். அவரும் டீ போட சமையல் அறைக்கு சென்றார். பின்னர் நான் அங்கு கிடந்த கயிற்றை எடுத்துக்கொண்டு அவர் பின்னால் தொடர்ந்து சென்று, திடீரென அவரை பிடித்து அமுக்கி வாயில் துணியை வைத்து அடைத்து, கயிற்றால் அவர் கழுத்தை இறுக்கி கொன்றேன். யாருக்கும் தெரியாமல் இருக்க நைசாக வெளியே வந்து வீட்டை பூட்டி அவர்கள் வழக்கமாக சாவிவைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டேன். ஆனால் எப்படியோ மாட்டிக்கொண்டேன்.

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து போலீசார் கருப்பையனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story