திருப்பூரில் திருமணமாகாத ஏக்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை
திருப்பூரில் திருமணமாகாத ஏக்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அண்ணா காலனியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் தங்கவேல் (வயது 34). இவர் தாராபுரம் ரோடு கண்டியன்கோவிலை அடுத்த ஆண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். தங்கவேலுக்கு திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு பெண் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக தங்கவேலின் திருமணம் தொடர்ந்து தாமதம் ஆனது. இதனால் தங்கவேல் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலுடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பெற்றோரிடம் பேசிவிட்டு தங்கவேல் தனது அறைக்கு தூங்கச்சென்று விட்டார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் தங்கவேல் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து அவருடைய பெற்றோர், தங்கவேல் தூங்கிய அறைக்கு சென்றனர். அப்போது அங்கு தங்கவேல் தூக்கில் தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் தங்கவேலின் உடலை பிடித்து கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளி ஆசிரியரான தங்கவேல் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று தங்கவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தங்கவேலின் வீடு அனுப்பர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது.
எனவே அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நகலை கொடுத்தால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்று பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் கூறிவிட்டனர். இதனால் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட தங்கவேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் நீண்டநேரமாக ஆம்புலன்சில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தங்கவேலின் தந்தை சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நகலை கொடுத்த பின்னரே தங்கவேலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.