செய்யூர் அருகே படகுகள், வீடுகள் எரிப்பு: இரு தரப்பினர் இடையே மோதல்; 2 பேர் வெட்டிக்கொலை


செய்யூர் அருகே படகுகள், வீடுகள் எரிப்பு: இரு தரப்பினர் இடையே மோதல்; 2 பேர் வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 Sept 2017 6:00 AM IST (Updated: 2 Sept 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

செய்யூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். படகுகள், மோட்டார் சைக்கிள்கள், வீடுகள் எரிக்கப்பட்டன.

மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் அருகே உள்ளது கடப்பாக்கம் குப்பம், ஆலம்பர ஊத்துகாட்டு அம்மன் குப்பம். இங்கு உள்ளவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கோவிலில் கடந்த ஆடி மாதம் திருவிழா நடைபெற்றது. அப்போது கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்தவருடைய உறவினர் பெண்ணுக்கும், ஆலம்பர ஊத்துகாட்டு அம்மன் குப்பத்தை சேர்ந்த வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் சூனாம்பேடு போலீசார் சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனால் கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கடல் அரிப்பின் காரணமாக படகுகளை கரையில் எடுத்து விட ஏற்பாடு செய்திருந்த டிராக்டர் சாவியை ஒரு தரப்பினர் எடுத்து கொண்டதால் இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 10–க்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தலைவர்கள் மற்றும் பெரியோர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் இருந்த மோட்டார் என்ஜினில் ஒரு சிலர் மணல் அள்ளி போட்டதாக தெரிகிறது. இதனால் இரு தரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. நேற்று அதிகாலை கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் வெடித்தது. படகுகள், மோட்டார் சைக்கிள்கள், வீடுகள் எரிக்கப்பட்டு கலவரம் ஆனது. இதில் கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த சேகர் (வயது 35), ராமகிருஷ்ணன் (34) இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட சேகருக்கு 2 மாற்றுத்திறனாளி மகள்கள் உள்ளனர். ராமகிருஷ்ணனுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

மேலும் கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த ராஜாராம் (30), மதன் (32), குமார் (38), மாயகிருஷ்ணன், முருகன் (32), மற்றொரு முருகன் (35), கிருஷ்ணராஜ் (32), செல்வம் (34), சக்திவேல் (36), விக்னேஷ் (32), ஹரிதாஸ், இசைவாணன் (35) உள்ளிட்ட 15 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், உதவி கலெக்டர் கிள்ளிசந்திரசேகர், செய்யூர் தாசில்தார் ராமச்சந்திரன் அங்கு விரைந்து வந்தனர். அப்போது பொதுமக்கள் அவர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்தி முற்றுகையிட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி. ஸ்ரீதர், காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மோதல் சம்பவத்தில் 2 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு பதற்றம் நிலவுவதால் அங்கு 500–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story