குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த பாலசமுத்திரமண்டலம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 27).
திருவள்ளூர்,
ஆந்திர மாநில மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததாக திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் கைது செய்யப்பட்ட முத்து ஏற்கனவே 3 முறை ஆந்திர மதுபாட்டில்களை தமிழகத்திற்கு கடத்தி வந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வரும் முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் முத்துவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான ஆணையை ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.