பக்ரீத் பண்டிகை, அனைவரது வாழ்விலும் சகோதரத்துவம், மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக அமையட்டும், முதல்–அமைச்சர் வாழ்த்து
பக்ரீத் பண்டிகை அனைவரது வாழ்விலும் சகோதரத்துவம், மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக அமையட்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனித சமுதாயம் அமைதியாகவும், மன நிறைவாகவும் வாழ வேண்டும் என்ற புனித குரானின் வழிகாட்டுதல்படி மனிதன் தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நல்ல வழிமுறைகளைப் போதித்தவர் நபிகள் நாயகம். நபிகள் நாயகத்தின் போதனைகள் மனித குலத்திற்கு பொதுவானவையாக திகழ்கின்றன.
இந்த பக்ரீத் திருநாளில் மானுட சமுதாயத்தின் மேன்மைக்காகப் பாடுபட்ட நபிகள் நாயகத்தின் தியாகப் பண்புகளை நினைத்து அவர் காட்டிய உன்னதமான வழியில் மனிதநேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் திகழ நாம் உறுதியேற்க வேண்டும். இஸ்லாமியர்கள் அமைதியை விரும்புகிறவர்கள். மற்ற மதத்தின் கோட்பாடுகளையும் மதித்து நடக்கும் நற்பண்புடையவர்கள். தியாகம் செய்து மற்றவர்களை நேசிப்பதை நபிகள் நாயகம் போதித்துள்ளார்கள்.
அன்பிற்கும் தியாகத்திற்கும் இறையருள் உண்டு என்பதைக் காட்டும் திருநாளான இந்த பக்ரீத் திருநாள் அனைவர் வாழ்விலும் சகோதரத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக அமையட்டும்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சபாநாயகர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
இஸ்லாமிய பெருமக்களால் தியாகத் திருநாள் என போற்றி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளில் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகம் செய்யும் மனப்பக்குவத்தை அனைவரும் பெற வேண்டும் என்பது பக்ரீத் பண்டிகையின் உன்னத நோக்கமாகும். ஆகவே முகமது நபிகளின் போதனைப்படி அன்பு, அறம், அமைதி, மனிதநேயம் ஆகிய நற்பண்புகளை வாழ்வில் கடைபிடிப்பதுடன், பிறருக்கு நம்மை தியாகம் செய்யவும் இந்தநன்னாளில் அனைவரும் சபதம் ஏற்போம்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
இஸ்லாமிய பெருமக்களால் தியாக திருநாளாக பக்ரீத் பண்டிகை உலகமெங்கும் போற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. இறைதூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளை நெஞ்சில் நிறுத்தி, பக்ரீத் திருநாளில் இல்லாதவருக்கு முடிந்தவரை கொடுத்து இஸ்லாமிய பெருமக்கள் இன்புற்று வாழ்ந்து வருகிறார்கள். அல்லாவின் கருணையால் வரியவர்களுக்கும் அறம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும், ஈகை பண்பு மிக்கவர்கள் என்பதை இந்த பக்ரீத் திருநாள் உலகத்திற்கு உணர்த்துகிறது.
அல்லாவை மனதில் தொழுது அனைவரிடத்திலும் பரிவு காட்டி முக மலர்ச்சியுடன் உதவி செய்து மனமகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை நெஞ்சம் நிறைந்த அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் கந்தசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
இனத்தாலும், மதத்தாலும் வேறுபட்டு இருந்தாலும் இந்தியன் எனும் உணர்வோடு ஒற்றுமையாய் நம்முடன் கரம் கோர்த்து வாழும் இஸ்லாமிய சகோதர–சகோதரிகள் கொண்டாடும் தியாக திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை வாழ்வியல் நெறியை வலியுறுத்தும் நாளாக அமைந்துள்ளது.
மத நல்லிணக்கத்திற்கு சான்றாக இந்து விழாக்களில் இஸ்லாமிய நண்பர்களும், இஸ்லாமிய விழாக்களில் இந்து நண்பர்களும் பங்கேற்கும் விருந்தோம்பல் செய்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வுகள் நம் நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் ஒன்று.
இத்தகைய சகோதரப்பாசம் என்றென்றும் தொடர்ந்து இந்திய பெருமையை கட்டிக் காப்போமென அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, இளந்தலைவர் ராகுல்காந்தி, வழியில் உறுதியேற்று இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பாசம் கலந்த பக்ரீத் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் ஷாஜகான் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,
புனித ஹஜ் யாத்திரையின் நிறைவு நாளை ஹஜ் பெருநாள் என்றும், பக்ரீத் பண்டிகை என்றும் கொண்டாடி மகிழ்கின்றனர் இஸ்லாமியர்கள். இஸ்லாமியர்களின் தியாக திருநாளாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இறை தூதர் இப்ராஹீமின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்து வாழ்வை எண்ணி தியாகத்தின் மேன்மையைப் போற்றும் நல்லதொரு நாள்.
மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார். குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான வணக்க வழிபாடு. எனவே இத்திருநாளில் இஸ்லாமிய பெருமக்கள் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தி வீடுகளில் ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் என தங்கள் வசதிக்கு ஏற்ப பலியிட்டு பின்னர் ஏழை எளியவர்களுக்கு குர்பானி கொடுத்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
இந்த தியாகத்திருநாளில் இறைவனின் அன்பும் அமைதியும் புவியில் தழைத்தோங்கட்டும். இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:–
தியாக திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி மகிழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாள் பக்ரீத் திருநாள். தன்னலத்துக்காக பிறரை பலி கொடுக்கும் இந்த உலகில் தான் பெற்ற ஒரே மகனையும் தியாகம் செய்யத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிமின் அர்ப்பணிப்பை, தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்வோம்.
இறைவனின் கட்டளையை இறைதூதர் இப்ராகிம் எப்படி பின்பற்றினாரோ அதேபோல் முகமது நபிகளின் போதனையை பின்பற்றி அன்பு, அறம், அமைதி, சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் ஆகியவை தழைத்தோங்க பகிர்ந்துண்ணும் பழக்கத்தை போதிக்கும் இந்த நன்னாளில் இஸ்லாமிய பெருமக்களோடு இணைந்து அனைவரும் சபதம் ஏற்போம்.
இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.