நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி தற்கொலை: தஞ்சையில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்


நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி தற்கொலை: தஞ்சையில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:45 AM IST (Updated: 2 Sept 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து தஞ்சையில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

நீட்தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா வழக்கு தொடர்ந்து போராடினார். இருப்பினும் அவருடைய மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் மனமுடைந்து நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை செய்ததையடுத்து நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், இறந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் நுழைவுவாயில் அருகே தஞ்சை- நாகை சாலை யில் சாலைமறியலில் ஈடு பட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை மாவட்ட அமைப்பாளர் தங்க.சுரேந்தர் தலைமையில் ஒன்றிய செயலாளர் வினோத், துணை செயலாளர் ராஜா, நிர்வாகி ரகு ஆகியோர் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற பள்ளி, கல்லூரி மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டம் அரைமணி நேரம் நடைபெற்றது. இதனால் தஞ்சை- நாகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story