புதுச்சேரியிலும் பரவியது: நீலத்திமிங்கல விளையாட்டுக்கு பல்கலைக்கழக மாணவர் பலி
நீலத்திமிங்கல விளையாட்டு புதுச்சேரிக்கும் பரவியது. இந்த விளையாட்டால் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
புதுச்சேரி,
ரஷியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் கொடூரமான ஆன்லைன் விளையாட்டு நீலதிமிங்கலம் (புளுவேல்). உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டு இருந்த இந்த விளையாட்டு தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உயிரை இந்த விளையாட்டு பலிவாங்கி வருகிறது.
50 நாட்களில் 50 சவால்களை முடிக்க வேண்டிய இந்த விளையாட்டு இறுதியில் விளையாடும் நபரை தற்கொலைக்கு இழுத்துச் சென்று விடுகிறது. சமீபத்தில் மதுரை திருப்பரங்குன்றம் விளாச்சேரியை சேர்ந்த விக்னேஷ்(வயது 19) என்ற கல்லூரி மாணவரின் உயிரை இந்த விளையாட்டு பறித்தது. இந்த அதிர்வலைகள் மாறுவதற்குள் இந்த விளையாட்டுக்கு புதுச்சேரியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பலியாகி உள்ளார். இதன்மூலம் இளைஞர்களின் உயிரை காவு வாங்கும் இந்த விளையாட்டு புதுச்சேரியிலும் பரவி இருப்பது தற்போது நிரூபணமாகி உள்ளது.
அதாவது, புதுவை காலாப்பட்டில் கிழக்கு கடற்கரை சாலையில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வந்து தங்கி இருந்து படித்து வருகின்றனர். அசாம் மாநிலம் ஜமாஜி பகுதியைச் சேர்ந்த ராம்குமார் போரா என்பவரது மகன் சசிகாந்தா போரா (வயது 23). எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் பல்கலைக்கழகத்தில் உள்ள கண்ணதாசன் மாணவர் விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.
இங்குள்ள ஒரு பெரிய ஹாலில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து படித்து வந்துள்ளனர். இந்தநிலையில் மாணவர் சசிகாந்தா போரா அவ்வப்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து இணையதள விளையாட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.
கடந்த 2 மாதமாக அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கத்துக்கு மாறாக தனது நண்பர்களுடன் அமர்ந்து சசிகாந்தா போரா பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது சிலரை நீலத்திமிங்கல விளையாட்டுக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் இந்த விளையாட்டின் விபரீதம் கருதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சசிகாந்தா போரா தனிமையில் இந்த விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதன்பின் தனது அறையில் செல்போனை வைத்து விட்டு அவர் இரவில் தூங்கச் சென்றார்.
இந்தநிலையில் நள்ளிரவில் அறையை விட்டு வெளியே சென்ற அவர் அங்குள்ள ஒரு மரத்தில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவர்கள் தங்கி உள்ள அறை இருந்த பகுதிகளை விடுதி வார்டன் பிச்சைப்பாண்டி சுற்றி வந்து பார்த்துள்ளார். அப்போது மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தெரியவந்ததை தொடர்ந்து மற்ற மாணவர்கள் அங்கு கூடினர். தங்களுடன் அறையில் தங்கி இருந்த சசிகாந்தா போரா தான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது அப்போது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் தெரிந்து காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்–இன்ஸ்பெக்டர் இளமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரத்தில் தொங்கிய மாணவர் சசிகாந்தா போராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவர் சசிகாந்தா போரா தங்கி இருந்த அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், மாணவர் சசிகாந்தா போரா நீலத்திமிங்கல விளையாட்டில் மூழ்கி இருந்தது குறித்து தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து அந்த அறையில் இருந்த சசிகாந்தா போராவின் செல்போனை பறிமுதல் செய்து சோதனை செய்து பார்த்ததில் அவர் நீலத்திமிங்கல விளையாட்டில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போனை ஆய்வுக்காக சைபர் கிரைம் போலீசாருக்கு காலாப்பட்டு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
பொதுவாக நீலத்திமிங்கல விளையாட்டு விளையாடுபவர்கள் தங்கள் உடம்பில் பல்வேறு அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம். அதுபோல் சசிகாந்தா போராவின் உடலில் அடையாளங்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து பார்த்ததில் அப்படி எதுவும் இல்லை. அவரது கையில் ‘சோஷி’ என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. மார்பு பகுதியில் ஒரு சிறிய அடையாளம் காணப்பட்டது. ஆனால் நீலத்திமிங்கல விளையாட்டுக்கான அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை.
இதுபற்றி தகவல் கிடைத்து போலீஸ் டி.ஜி.பி. சுனில் குமார் கவுதம், கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மாணவர் சசிகாந்தா போராவின் உடலை பார்வையிட்டனர். பின்னர் காலாப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு சென்றனர். அங்கு தற்கொலை செய்து கொண்ட மாணவரின் நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.
மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து அசாமில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதுவைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் வந்த பிறகு தான் தற்கொலை செய்து கொண்ட சசிகாந்தா போராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
வெளி மாநிலத்தில் தங்கி இருந்து படிக்கும் தங்களது பிள்ளைகளுடன் பேசுவதற்காகவும், படிப்பு குறித்து விசாரிப்பதற்காகவும் பெற்றோர் அவர்களுக்கு விலை உயர்ந்த செல்போன்களை வாங்கிக் கொடுத்து கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தநிலையில் இதுபோன்ற விபரீத விளையாட்டுகளுக்கு அடிமையாகி அவர்களது உயிருக்கே உலைவைத்த விபரீதம் பற்றி அறிந்து விடுதிகளில் தங்கி படித்து வரும் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலத்திமிங்கல விளையாட்டுக்கு புதுவை பல்கலைக்கழக மாணவர் சசிகாந்தா போரா பலியான செய்தி அறிந்து உடனடியாக தங்களது பிள்ளைகளிடம் தொடர்பு கொண்டு பேசி இதுபோன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களது பெற்று கேட்டுக் கொண்டதுடன் கதறி அழுதனர்.
புதுவை பல்கலைக்கழகத்திலும், என்ஜினீயரிங், மருத்துவக் கல்லூரிகளிலும் தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பல்வேறு விடுதிகளில் தங்கி இருந்து படித்து வருகிறார்கள். இவர்களிடம் பல்வேறு வசதிகள் கொண்ட விலை உயர்ந்த ‘ஸ்மார்ட்’ போன்கள் சர்வ சாதாரணமாக புழங்குகின்றன.
எனவே இளைஞர்கள், மாணவர்களை குறி வைத்து வேகமாக பரவிய நீலத்திமிங்கல விளையாட்டில் புதுவையில் தங்கி இருந்து படித்து வரும் இந்த மாணவர்களில் மேலும் பலர் சிக்கி இருக்கலாமா? என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த விபரீத விளையாட்டுக்கு பல்கலைக்கழக மாணவர் பலியான சம்பவம் புதுவையில் மாநிலத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.