மாணவி அனிதா தற்கொலை: அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


மாணவி அனிதா தற்கொலை: அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Sept 2017 4:15 AM IST (Updated: 2 Sept 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வலியுறுத்தி திருவாரூர், மன்னார்குடியில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவாரூர்,

அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா. இவர் நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர். இந்த நிலையில் நேற்று மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்த அனிதா, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூரில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். அப்போது நீட் தேர்வு மூலம் மருத்துவ மாணவர்களின் சேர்க்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கூடாது. தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்காத மத்திய அரசும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்க போராடாத மாநில அரசும் தான் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணம் என கூறி மன்னார்குடி பெரியார் சிலை சந்திப்பு அருகில் அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் கலைச்செல்வன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி மகேந்திரன், இளைஞர் பெருமன்ற நிர்வாகி பாப்பையன், மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் பாலமுருகன், கலைச்செல்வன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story