நாமக்கல்லில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு


நாமக்கல்லில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Sept 2017 4:27 AM IST (Updated: 2 Sept 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்,

நாமக்கல்லில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், எம்.எல்.ஏக்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு விழா பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

விழாவினை மிகச்சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், ஒவ்வொரு துறை அலுவலர்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. விழா நாளன்று பயனாளிகளையும், பொதுமக்களையும் பாதுகாப்பாக அழைத்து வந்து விழா சிறப்படைய செய்வது குறித்தும் ஆய்வின்போது அறிவுறுத்தப்பட்டது. துறை அலுவலர்கள் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களை காட்டிலும் நாமக்கல் மாவட்டத்தில் இவ்விழா மிக சிறப்பாக நடைபெற அனைத்து பணிகளையும், சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி பேசினார்.

அதை தொடர்ந்து சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் சரோஜாவும் விழாவை முன்னிட்டு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மகளிர் திட்ட அலுவலர் மணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாலமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், உதவி கலெக்டர்கள் ராஜசேகரன், பாஸ்கரன், மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலச்சந்திரன் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பள்ளி கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி நிறைவு விழாவும், சேலம் மண்டல கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைநிகழ்ச்சிகளும் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளி கூட்டரங்கில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story