அகில பாரத இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் சொத்தவிளை கடலில் கரைப்பு


அகில பாரத இந்து மகா சபா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் சொத்தவிளை கடலில் கரைப்பு
x
தினத்தந்தி 2 Sept 2017 4:40 AM IST (Updated: 2 Sept 2017 4:40 AM IST)
t-max-icont-min-icon

அகில பாரத இந்து மகா சபா சார்பில் குமரி மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக நாகர்கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் நேற்று கரைக்கப்பட்டன.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில், கடந்த 25-ந் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவில்கள், நகரின் முக்கிய சந்திப்புகள், தெரு சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் இந்து முன்னணி, அகில பாரத இந்து மகாசபா, தமிழ்நாடு சிவசேனா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

இதுதவிர வீடுகளில் கோதுமை, அரிசி போன்றவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு, காலை, மாலை என இருவேளைகளிலும் ஒருவார காலம் பூஜைகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இந்தநிலையில் குமரி மாவட்டம் முழுவதிலும், அகில பாரத இந்து மகாசபா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதன்படி, நாகர்கோவில் நகர் பகுதி, அகஸ்தீஸ்வரம், தோவாளை, குருந்தன்கோடு ஆகிய பகுதிகளில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட 3500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சொத்தவிளை கடலில் நேற்று கரைக்கப்பட்டன.

இதற்காக நேற்று காலை முதலே, இந்து மகாசபா அமைப்பை சேர்ந்தவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நாகராஜா திடலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாலை 4 அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாகராஜா கோவில் திடலில் இருந்து புறப்பட்டு மணி மேடை சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், கோட்டார், ஈத்தாமொழி சந்திப்பு வழியாக சொத்தவிளை கடற்கரைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு மாநில மாணவரணி தலைவர் சுரேஷ்ராமன் தலைமை தாங்கினார். தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். அரிமா தங்கமுருகன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக, அகில பாரத இந்து மகாசபா மாநில தலைவர் தா.பாலசுப்பிரமணியன் எழுச்சியுரையாற்றினார். ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது. ஊர்வலத்தின் முன்பு மகளிரணியை சேர்ந்த பெண்கள் முத்துக்குடை ஏந்தியும், அலங்கரிக்கப்பட்ட குதிரையும் வந்தது. அதைத்தொடர்ந்து அகில பாரத இந்து மகாசபா கேரள மாநில தலைவர் சாய் சொரூபநாத், துணைத்தலைவர் ஆதித்திய சொரூபநாத் ஆகியோர் கும்பம் ஏந்தி நடந்து வந்தனர். இதில் அமைப்பு நிர்வாகிகள், தொண்டர் படையை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்ட விநாயகர் சிலைகளில் ஊஞ்சல் விநாயகர், கற்பக விநாயகர் சிலைகள் போன்றவை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

இதுபோல், இறச்சகுளம், சாஸ்தாநகர், விஷ்ணுபுரம் காலனி, இந்திரா காலனி, திட்டுவிளை, வடக்கு மார்த்தால், காட்டுப்புதூர், மேல்கரை, அழகியபாண்டியபுரம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டது.

விநாயகர்சிலை ஊர்வலத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாகர்கோவிலில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கரன், விஜயபாஸ்கர் தலைமையில், 6 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 20 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, ஊர்காவல் படையினர் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி இரவு 9 மணி அளவில் முடிவடைந்தது. விநாயகர் ஊர்வலத்தையொட்டி நகரப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story