ஊட்டியில் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழை ரெயில்வே போலீஸ் நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது


ஊட்டியில் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழை ரெயில்வே போலீஸ் நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது
x
தினத்தந்தி 3 Sept 2017 4:00 AM IST (Updated: 2 Sept 2017 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ரெயில்வே போலீஸ் நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது.

ஊட்டி,

ஊட்டியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் பல்வேறு கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். கடந்த சில நாட்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. இந்த சாரல் மழை தேயிலை மகசூலுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. ஆனால், ஊட்டியில் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் அணைகளில் நீர்மட்டம் உயரவில்லை.

இந்த நிலையில் ஊட்டியில் நேற்று காலையில் வெயில் அடித்தது. பின்னர் வானம் மப்பும், மந்தாரமாக இருந்ததுடன் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12.15 மணிக்கு ஊட்டி நகரில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை கனமழையாக தொடர்ந்து 2 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் ஊட்டி கூட்ஷெட் சாலை, எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், லோயர் பஜார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது..

ஊட்டி படகு இல்ல சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் திணறினார்கள். மேலும் அப்பகுதியில் ஒரு ஆட்டோ தேங்கி நின்ற தண்ணீரில் செல்ல முடியாமல் பாதியில் நின்றது. பின்னர் அரசு பஸ் மூலம் கயிறு கட்டி அந்த ஆட்டோ மீட்கப்பட்டது. மேலும் கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

ஊட்டி ரெயில் நிலையம் அருகில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தை மழை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்கு பணியில் இருந்த போலீசார் சிரமம் அடைந்தனர். கூட்ஷெட் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்த படியும், தத்தளித்த படியும் வந்தன. ஊட்டி படகு இல்ல சாலையில் உள்ள குண்டும், குழியுமான இடங்களில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஊட்டி–குன்னூர் ரோட்டில் உள்ள நொண்டிமேடு பகுதியில் இருந்து தண்ணீர் பாய்ந்து வந்து அப்பகுதியில் உள்ள கால்வாயில் கலந்தது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியவில்லை.

மழையினால் ஊட்டி மார்க்கெட்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மழைவிட்ட சில நிமிடங்களில் மார்க்கெட்டில் தண்ணீர் வடிந்தது. மழை காரணமாக ஊட்டி புதுமந்து ரோட்டில் சிறிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். கிராமப்புற பகுதிகளுக்கு சென்று வரும் அரசு பஸ்களில் மழைநீர் ஒழுகியது. இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். ஊட்டியில் தொடர்ந்து மாலையிலும் மழை பெய்தது.


Next Story