விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காவிட்டால் போராட்டம்
விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று திருவாடானையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் பேசினார்.
தொண்டி,
திருவாடானையில் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் பட்டிமன்றம் தர்மர் கோவில் முன்பு நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் முகமது முக்தார், பொதுக்குழு உறுப்பினர் ஆணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அறிவழகன் வரவேற்றார். இதில் பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி, முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தென்னவன், மாவட்ட செயலாளர் திவாகரன், தி.மு.க. தணிக்கை குழு உறுப்பினர் காசிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட அவை தலைவர் தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன் பேசியதாவது:– தமிழகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாளை தி.மு.க.வினர் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடுகின்றனர். இதற்கு காரணம் மக்களை பற்றி அனுதினமும் சிந்திக்கக்கூடிய தலைவராக அவர் திகழ்கிறார். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தின் மீது தீராத பாசம் கொண்டவர். ஒருமுறை பரமக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க. தலைவரை பற்றி நான் பல செய்திகளை எடுத்து சொல்லி அவரை பேச அழைத்தேன்.
அவர் பேசும்போது எனக்கும் ராமநாதபுரத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு என்றும், இந்த மாவட்டத்திற்கு முகவை என்ற இன்னொரு பெயர் உண்டு. அதில் மு.க. என்ற எனது பெயரும் அடங்கும். ஆகவே நான் உங்களில் ஒருவன்தான் என்றும் குறிப்பிட்டார். அந்த அளவிற்கு இந்த மாவட்டத்தின் மீது பாசம் கொண்டவர். அதனால் தான் அவருடைய ஆட்சியில் இந்த மாவட்ட மக்களின் தாகத்தை போக்க நரிப்பையூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தினார். அதேபோல காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் மிகப்பெரிய அளவில் இந்த மாவட்ட மக்களுக்காக தந்தார். ஆனால் அந்த திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டது.
திருச்சி–ராமேசுவரம் நான்கு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா தான் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று நிறுத்தினார். அவர் இறந்த பிறகு மீண்டும் அந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இன்னும் 2 மாதங்களில் திருச்சி–ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் மழை இல்லாமல் பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.
இந்த மாவட்டத்தில் சுமார் 51 வருவாய் கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்சு தொகை முழுமையாக விடுபட்டுஉள்ளது. இதற்காக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்குமுன் திருவாடானையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ராமசாமி, தி.மு.க. மாவட்ட செயலாளர் திவாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். விரைவில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வழங்காவிட்டால் தி.மு.க. சார்பில் பொதுமக்கள், விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.