ஓசூர் கெலவரப்பள்ளி கால்வாயில் உடைப்பு: 20 கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


ஓசூர் கெலவரப்பள்ளி கால்வாயில் உடைப்பு: 20 கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Sept 2017 4:00 AM IST (Updated: 3 Sept 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழையால் ஓசூர் கெலவரப்பள்ளி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் 20 கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் புகுந்து 25 ஏக்கர் விவசாய பயிர்கள் மூழ்கின.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கனமழை கொட்டி தீர்த்தது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அணைக்கு நேற்று காலை 800 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து திடீரென 1,120 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான, 44.28 அடியில், 43.30 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது.

இதன் காரணமாக அணைக்கு வந்த 1,120 கன அடி தண்ணீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாத்தக்கோட்டா தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் பாத்தகோட்டா, ராமாபுரம், ஆழியாளம், குக்கலப்பள்ளி உள்ளிட்ட 20 கிராமமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வலது கால்வாயில் 26 கன அடியும், இடது கால்வாயில் 62 கன அடி தண்ணீரும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் முத்தாலி சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அந்த நேரம் இடது கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தண்ணீர் முழுவதும் வெளியேறியது.

இதனால் கால்வாய் ஓரத்தில் இருந்த 25 ஏக்கரில் பயிரிப்பட்டு இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து அணையில் இருந்து இடது கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. முத்தாலியில் கெலவரப்பள்ளி கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Next Story