மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்


மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 3 Sept 2017 4:00 AM IST (Updated: 3 Sept 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கதிரவன் அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட மனித வள மேம்பாட்டு அறிக்கை 2017-க்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். இதில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைத்தல், கருவுற்ற பெண்களை தொடர்ந்து கண்காணித்து இறப்பு விகிதத்தை குறைத்தல், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றில் குழந்தை பிறப்பு நடக்க அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி- ஆரம்ப கல்வியை பொறுத்தவரையில் இடை நின்றவர்களை கண்டறிந்து தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆரம்ப கல்வியில் இருந்து மேல்நிலைக்கல்விக்கு போகும் மாணவ-மாணவிகள் விகிதாசாரம் அதிகமாக்கிட வேண்டும். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து திட்டங்கள் தேவைகள் அறிந்து 5 ஆண்டு திட்டமாக தயார் செய்து அளிக்க வேண்டும். மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். அரசின் திட்டங்கள் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டும்.

மேலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தனிநபர் கழிப்பறை கட்டுமான பணிகள் 31.12.2017-க்குள் மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாவட்டமாக அறிவிக்க தனி நபர் கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு அரசு ரூ. 12 ஆயிரம் நிதி உதவி அளிக்கிறது. இந்த வாய்ப்பை பயன் படுத்தி தனி நபர் கழிப்பறை இல்லாத வீடுகளில் உடனடியாக தனி நபர் கழிப்பறைகளை கட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மைராடா தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் முருகன் மனித வள மேம்பாடு 2017-க்கான அறிக்கையை தொகுத்து வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் நரசிம்மன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன், மகளிர் மேம்பாட்டு திட்ட அலுவலர் சந்திரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Next Story