மந்திரிசபை விரிவாக்கம் எதிராலி சித்தராமையா மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி


மந்திரிசபை விரிவாக்கம் எதிராலி சித்தராமையா மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி
x
தினத்தந்தி 3 Sept 2017 2:30 AM IST (Updated: 3 Sept 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபை விரிவாக்கம் எதிரொலியாக முதல்–மந்திரி சித்தராமையா மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெங்களூரு,

மந்திரிசபை விரிவாக்கம் எதிரொலியாக முதல்–மந்திரி சித்தராமையா மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் சித்தராமையா தன்னிச்சையாக முடிவு எடுப்பதாக தனது ஆதரவாளர்களிடம் கூறி மாநில தலைவர் பரமேஸ்வர் ஆதங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சித்தராமையாவுடன் மோதல்

கர்நாடக மந்திரிசபை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிய மந்திரிகளாக ரேவண்ணா, திம்மாபூர், கீதா மகாதேவ பிரசாத் பதவி ஏற்றுள்ளனர். ஆனால் நேற்று முன்தினம் கவர்னர் மாளிகையில் நடந்த புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் புறக்கணித்தார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், புதிய மந்திரிகள் 3 பேர் நியமனத்தில் முதல்–மந்திரி சித்தராமையாவுக்கும், பரமேஸ்வருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தான், மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை பரமேஸ்வர் புறக்கணித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

அதாவது துமகூருவை சேர்ந்தவரான சடக்‌ஷரி, அல்லது நரேந்திரசாமிக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று பரமேஸ்வர் வலியுறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மகாதேவ பிரசாத் தனது நெருங்கிய நண்பர் என்பதாலும், மகாதேவ பிரசாத்தின் மனைவி கீதாவுக்கு முதல்–மந்திரி சித்தராமையா மந்திரி பதவி வழங்கியதால், அவர்களுக்குள் மோதல் உண்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

பரமேஸ்வர் ஆதங்கம்

எல்லாவற்றுக்கும் மேலாக போலீஸ் மந்திரி பதவியை ரமாநாத் ராய் அல்லது டி.கே.சிவக்குமாருக்கு வழங்கும்படி சித்தராமையாவிடம் பரமேஸ்வர் கூறியதாகவும், ஆனால் ராமலிங்க ரெட்டிக்கு கடைசி நேரத்தில் போலீஸ் மந்திரி பதவியை சித்தராமையா வழங்கியதால், அவர் மீது பரமேஸ்வர் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாநில தலைவராக நியமிக்கப்பட்ட பின்பு தினமும் கட்சி பணிகளில் பரமேஸ்வர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். மேலும் பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வருவதையும் அவர் வழக்கமாக வைத்திருந்தார்.

ஆனால் சித்தராமையாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவும், மந்திரிகள் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்ததாலும் பரமேஸ்வர் தனது வீட்டைவிட்டு நேற்று வெளியே வரவில்லை. அதே நேரத்தில் தன்னை வீட்டில் வந்து சந்தித்த ஆதரவாளர்களிடம் மாநில தலைவரான நான் சொல்வதை சித்தராமையா ஏற்றுக் கொள்வதே இல்லை என்றும், அவர் தன்னிச்சையாகவே அனைத்து முடிவுகளையும் எடுத்து வருவதாகவும், இதனை கட்சி மேலிட தலைவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் பரமேஸ்வர் ஆதங்கப்பட்டு கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தலைவர்கள் அதிருப்தி

இதுபோன்று, தங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று மூத்த தலைவர்களான மோட்டம்மா, சடக்‌ஷரி உள்ளிட்டோர் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு மந்திரி பதவி கிடைக்காததால் முதல்–மந்திரி சித்தராமையா மீது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுபோல, குஜராத்தில் நடந்த டெல்லி மேல்–சபை தேர்தலில் போட்டியிட்டு, அந்த மாநில மூத்த தலைவரான அகமது பாட்டீல் வெற்றி பெறுவதற்கு மந்திரி டி.கே.சிவக்குமார் காரணமாக இருந்தார்.

இதனால் டி.கே.சிவக்குமாருக்கு போலீஸ் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகமது பட்டீல் கூறியதாகவும், அதனை ஏற்காமல் ராமலிங்க ரெட்டியை போலீஸ் மந்திரியாக நியமித்தததால், சித்தராமையா மீது அகமது பட்டீலும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. மந்திரிசபை விரிவாக்கம் காரணமாக கர்நாடக காங்கிரசில் உட்கட்சி மோதல் உருவாகி இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Next Story