சென்னைக்கு மாப்பிள்ளை பார்க்க வந்த போது பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து பெண் என்ஜினீயர் சாவு
ஆம்பூர் அருகே சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தூத்துக்குடியை சேர்ந்த பெண் என்ஜினீயர் பலியானார். அவரது தம்பி உள்பட 30 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆம்பூர்,
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டது. அந்த பஸ்சை திருப்பூரை சேர்ந்த டிரைவர் பாலமுருகன் என்பவர் ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில் அந்த பஸ் வேலூர் மாவட்டம் ஆம்பூரை கடந்து உடையராஜபாளையம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. எனினும் பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் பஞ்சராகி நின்றது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் சிக்கிக்கொண்டு ‘காப்பாற்றுங்கள்’, ‘காப்பாற்றுங்கள்’ என கூக்குரல் எழுப்பினர்.
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம், ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ருபவதிஜீஷா (25) என்ற பெண் என்ஜினீயர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது தம்பி ஜோயல் (22), சசிரேகா (25), சாய் சினேகா (20), அருண் (31), பவித்ரா (21), சரவணகுமார் (30), நடராஜன் உள்ளிட்ட 30 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த பெண் என்ஜினீயர் ருபவதிஜீஷாவின் உடலை ஆம்பூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவிழ்ந்த பஸ்சும் தூக்கி நிறுத்தப்பட்டது.
விபத்தில் இறந்த பெண் என்ஜினீயர் ருபவதிஜீஷா என்பவர் தூத்துக்குடி கடையனோடை பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் மகள் ஆவார். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த அவருக்கு பெற்றோர் சென்னையில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். மாப்பிள்ளையை பார்க்க தனது தம்பி ஜோயலுடன் இந்த சொகுசு பஸ்சில் சென்றபோதுதான் பலியானார். இந்த விபத்து குறித்து ஆம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.