விடுமுறை கிடைக்காத விரக்தியில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை முயற்சி


விடுமுறை கிடைக்காத விரக்தியில் ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 3 Sept 2017 4:00 AM IST (Updated: 3 Sept 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை கிடைக்காத விரக்தியில் தேனி ஆயுதப்படை போலீஸ்காரர், இன்ஸ்பெக்டர் முன்னிலையில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தேனி,

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியை சேர்ந்த ரத்தினம் மகன் ரமேஷ் (வயது 25). இவர் தேனி ஆயுதப்படை போலீஸ் படைப்பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஆயுதப்படை பிரிவில் இருந்த அதிகாரிகளிடம் தனக்கு விடுமுறை வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், விடுமுறை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த ரமேஷ் நேற்று மாலையில், ஆயுதப்படை வளாகத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் முன்னிலையில், வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்த போலீசார் மீட்டு, போலீஸ் வேனில் ஏற்றி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அல்லிநகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் கேட்ட போது, ‘போலீஸ்காரர் ரமேஷ் தனது உறவினர் திருமணத்துக்கு சென்றுவர விடுமுறை கேட்டுள்ளார். ஏற்கனவே சுமார் 40 பேர் விடுமுறையில் உள்ளதால் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுமுறை கொடுக்க யோசித்துள்ளார். இதனால், பயமுறுத்துவதற்காக வி‌ஷம் குடித்து இருப்பதாக தெரியவருகிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.


Next Story