தமிழக கல்வி உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது சீமான் பேட்டி


தமிழக கல்வி உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது சீமான் பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2017 4:45 AM IST (Updated: 3 Sept 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரில் மாணவி அனிதாவின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர்

அரியலூர்,

நேற்று இரவு கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறு வயது முதலே அனிதா மருத்துவ படிப்பு மீது காதல் கொண்டு இருந்தார். நீட் என்ற தேர்வில், தான் புறக்கணிக்கப்பட்ட காரணத்தால் அவருக்கு இந்த துயர முடிவு ஏற்பட்டு உள்ளது. இதை தற்கொலை என்று நான் சொல்ல மாட்டேன். மத்திய அரசும், நீதியும் சேர்ந்து செய்த படுகொலைதான் இது. ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு வரக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்து உள்ளனர். ஜெயலலிதாவின் ஆத்மாவிடம் பேசியதாக சொல்பவர்களை, மாணவி அனிதாவின் ஆத்மாவிடம் பேச சொல்லுங்கள். அப்போது எத்தனை பேர் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு நடை பிணமாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.

1,176 மதிப்பெண்கள் எடுத்த போதும் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காததில் இருந்து, தமிழக கல்வி உரிமைகளை மத்திய அரசு பறித்து உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. தமிழ்நாட்டில் காவிரி பிரச்சினை, மொழி பிரச்சினை, கல்வி பிரச்சினை உள்ளிட்ட உயிர்பலி சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அனிதா இறந்த பிறகு அவருடைய குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் இழப்பீடு, குடும்பத்தை சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்குவதற்கு பதில், தமிழக அரசு முதலிலேயே நல்ல முடிவு எடுத்து இருந்தால் அனிதா டாக்டர் ஆகி இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து இயக்குனர் அமீர் கூறுகையில், பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்து மாணவி தற்கொலை என்ற செய்தி தான் கேள்விப்பட்டு இருப்போம். அதிக மதிப்பெண் எடுத்த போதும் மாணவி இறந்த சம்பவத்தின் மூலம், புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று சொல்பவர்கள், மருத்துவ மாணவர்களின் கனவை தகர்க்கும் விதமாக செயல்பட்டு இருப்பது தெரிகிறது.

ஓட்டு போட்டு தேர்வு செய்யப்பட்டு மக்கள் பிரச்சினையை தீர்க்காதவர்கள், கூவத்தூர், புதுச்சேரியில் ஊஞ்சல் ஆடுவது, மக்களை கிளர்ச்சிக்கு உள்ளாக்க நேரிடும். இஸ்லாமிய நாடுகளில் கிளர்ச்சி வெகுண்டு எழுந்து பதவியில் உள்ளவர்களை மக்கள் அடித்து கொலை செய்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே போன்ற நிலை தமிழகத்தில் உருவாக வாய்ப்பு இருக்கிறது, என்று கூறினார்.

Next Story