அனுப்பர்பாளையம் பகுதியில் மூடிய 2 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க எதிர்ப்பு


அனுப்பர்பாளையம் பகுதியில் மூடிய 2 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Sept 2017 4:30 AM IST (Updated: 3 Sept 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

அனுப்பர்பாளையம் பகுதியில் மூடப்பட்ட 2 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் 100–க்கும் மேற்பட்டோர் திரண்டு அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர்.

அனுப்பர்பாளையம்,

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. மேலும் திருப்பூர் மாநகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளும் இதில் அடங்கும். இந்த நிலையில் பல்வேறு விதிமுறைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பு அருகில் மற்றும் சிறுபூலுவப்பட்டி ரிங் ரோடு ஆகிய 2 இடங்களில் ஏற்கனவே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுகாலை அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரங்கராஜ், செந்தில்குமார், ராமதாஸ், ஈஸ்வரமூர்த்தி(தி.மு.க.), ஈஸ்வரன் (காங்கிரஸ்), நடராஜ் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), தம்பி வெங்கடாச்சலம் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), மோகன் (ஸ்ரீசெல்வவிநாயகர் கமிட்டி), பல்வேறு குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் திரண்டு மாநகர போலீஸ் வடக்கு உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட உதவி கமி‌ஷனர் அண்ணாத்துரை மாவட்ட கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மேலாளருக்கு மனுவை அனுப்பி வைப்பதாகவும், இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுக்குமாறும் தெரிவித்தார்.

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) 500–க்கும் மேற்பட்டோர் திரண்டு மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் மூடப்பட்ட 2 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரே நேரத்தில் 100–க்கும் மேற்பட்டோர் திரண்டு போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story