திருப்பூரில் தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது சம்பவம்: மொபட்டில் சென்றவரை வெள்ளம் இழுத்து சென்றது
திருப்பூரில் தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது மொபட்டில் சென்றவரை வெள்ளம் இழுத்து சென்றது. தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடினார்கள்.
திருப்பூர்,
திருப்பூரில் 55 மில்லி மீட்டரும், அவினாசியில் 62 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 54 மில்லி மீட்டரும், காங்கேயத்தில் 7.40 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 95 மில்லி மீட்டரும், மூலனூரில் 51 மில்லி மீட்டரும், உடுமலையில் 96 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. திருப்பூர் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழை காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.
மழை வெள்ளம் காரணமாக நேற்று மங்கலத்தில் உள்ள நல்லம்மண் தடுப்பணை நிரம்பி வழிந்தது. மங்கலம் ரோட்டையும், காலேஜ் ரோட்டையும் இணைக்கும் அணைப்பாளையம் ரோட்டில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் நேற்று காலை அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
அதன்பிறகு வெள்ளம் சிறிதளவு குறைந்ததும் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. காலை 11 மணி அளவில் மொபட்டில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தரைப்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே லாரி வர அதற்காக பாலத்தின் ஓரமாக சென்றதாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து சத்தம்போட்டுள்ளனர். உடனடியாக திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தரைப்பாலத்தில் இருந்து சிறிது தூரத்தில் கிடந்த மொபட்டை மட்டும் மீட்டனர். மொபட்டில் வந்தவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என்பது உள்ளிட்ட விவரம் தெரியவில்லை. இருப்பினும் மொபட்டின் எண்ணை வைத்து திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு வரை தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டனர். ஆற்றில் உடல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.