அ.தி.மு.க. நிர்வாகிகளை நீக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


அ.தி.மு.க. நிர்வாகிகளை நீக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x
தினத்தந்தி 3 Sept 2017 5:45 AM IST (Updated: 3 Sept 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட நிர்வாகிகளை நீக்க யாருக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை,

திருமங்கலத்தில் வருகிற 7–ந் தேதி புதிததாக கட்டப்பட்ட கல்லூரியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். அதையொட்டி திருமங்கலம் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:–

திருமங்கலம்–கப்பலூர் பாலம் அருகே ரூ.11 கோடியே 36 லட்சம் செலவில் புதிததாக கட்டி முடிக்கப்பட்ட கல்லூரியை முதல்–அமைச்சர் திறந்து வைக்கிறார். இதில் கல்லூரி மாணவர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட கழக நிர்வாகிகள் யாரையும் நீக்க அதிகாரம் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஒரு தனிநபரை முன்னிலைப்படுத்துவதற்காக சூழ்ச்சியும், துரோகமும் நடந்து வருகிறது. கழகத்தை வீழ்த்த நினைப்பவர்களின் சூழ்ச்சியை தொண்டர்கள் முறியடிப்பார்கள். ஜெயலலிதாவால் கொண்டு வந்த திட்டங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

மக்களுக்கு என்ன தேவையோ அதை உடனடியாக நிறைவேற்றி தரும் அரசாக இந்த அரசு உள்ளது. நம்மில் குழப்பதை ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காயலாம் என்று சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.தமிழரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story