மாணவி அனிதா மரணம்: அரசியல்வாதியாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன், எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் அறிக்கை
அரசியல்வாதியாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மத்திய தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
எனது தொழிலை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து 18 மாதங்களுக்கு பிறகு, முதல்முறையாக தவறான பாதையை நான் தேர்ந்து எடுத்து விட்டேனோ? என அதிர்ந்தேன். நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் கூட அரசியல்வாதியாக இருப்பதற்கு உள்ளபடியே வெட்கப்படுகிறேன். ஏனெனில் அனிதாவின் ரத்தம் அரசாங்கத்தில் இருக்கிற அனைத்து அரசியல்வாதிகளின் கரங்களிலும் தோய்ந்துள்ளது.
இரண்டு குழந்தைகளின் தந்தையான எனக்கு, பெற்றோருக்கு நம்பிக்கை ஒளியாக திகழ்ந்த அனிதாவின் இழப்பு அவர்களுக்கு ஏற்படுத்திய வலியை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை. தீங்கேதும் செய்து விடக்கூடாது என்கிற அடிப்படை தத்துவத்தை பாராது தற்பெருமை கொள்கிற, சுயநலமிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளை காண்கையில் எனக்கு வெறுப்பும், கோபமும் ஏற்படுகிறது. என்னவெல்லாம் செய்து இந்த சோகத்தை தடுத்திருக்கலாம் என்றும், எத்தனை தருணங்களில் எல்லாம் மற்ற தவறான காரணங்களுக்காக இவர்கள் தங்கள் செயல்பாடுகளையும், முடிவுகளையும் மாற்றிக்கொண்டனர் எனவும் நினைத்து பார்க்கிறேன்.
ஏதோ ஒரு வழியில் கடந்த மார்ச் மாதமே ஒரு முடிவு எட்டப்பட்டிருப்பின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தீர்க்கமாக வேறு வாய்ப்புகளை தேடி சென்றிருப்பர். ஆனால் மத்திய, மாநில அரசுகளின் குழப்பங்களினால் ஆகஸ்டு மாதம் வரை மாணவர்களையும் பெற்றோர்களையும் தெளிவற்ற நிலையில் வைத்து, அவர்களை எவ்வித முடிவையும் எடுக்க இயலாத சூழ்நிலைக்கு தள்ளிவிட்டுவிட்டது.
இந்த நிலையில், இன்னும் மோசமாக இருப்பிட சான்றிதழ் ஊழல் வேறு நடந்துள்ளது.
பேராசையும், வக்கிரமும் மட்டுமே லட்சியமாக கொண்டு பணம் ஈட்டுகிற அமைப்பு தான் மாணவி அனிதாவை இந்த முடிவுக்கு தள்ளியது. அப்பேற்பட்ட அமைப்பில் நாம், நம்மை எப்படி இணைத்துக்கொள்வது? எதேச்சதிகாரமிக்க, தகுதியற்ற, ஊழல் நிறைந்த, அடிவருடி பிழைக்கிற, சட்டவிரோதமான வழிகளில் செழிப்பவர்கள் உழலும் இந்த சாக்கடையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.