மாணவி அனிதா உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி


மாணவி அனிதா உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி
x
தினத்தந்தி 3 Sept 2017 5:30 AM IST (Updated: 3 Sept 2017 1:30 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கூலித்தொழிலாளியாக உள்ளார்.

செந்துறை,

இவரது மகள் அனிதா (17). தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். பிளஸ்-2 படிப்பினை இந்த ஆண்டு நிறைவு செய்த இவர், மருத்துவ படிப்பில் சேர்ந்து டாக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவுடன் இருந்தார். இந்த நிலையில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வினை எழுதிய அனிதா 700-க்கு 86 மதிப்பெண் பெற்று இருந்தார். இதனால் மருத்துவ கலந்தாய்வில் தனக்கு இடம் கிடைக்காது என எண்ணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடினார்.

எனினும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தனது டாக்டராகும் லட்சியம் நிறைவேறாமல் போனதை எண்ணி மனஉளைச்சலில் தவித்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று முன்தினம் தூக்குப்போட்டு மாணவி அனிதா தற்கொலை செய்தார். இந்த சம்பவம் அனிதாவின் குடும்பத்தினரையும், கிராம மக்களையும் மட்டுமல்லாமல் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

இதற்கிடையில் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்ததும் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் அனிதாவின் உடல் உறவினர்களிடம் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் நேற்று காலை குழுமூரில் உள்ள அனிதா வீட்டின் அருகே உள்ள சமுதாயக்கூட காலி இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டு அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் செய்திருந்தனர். மாணவி அனிதாவின் உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு இந்து முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. மேலும் மாணவி உடல் வைக்கப்பட்ட இடத்தின் அருகே மற்றொரு பந்தல் அமைத்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் சோகத்துடன் அங்கு அமர்ந்து இருந்தனர். அனிதாவின் தந்தை சண்முகம் மற்றும் அவருடைய சகோதரர்கள் அனிதாவின் உடல் அருகே கதறி அழுதபடி உட்கார்ந்து இருந்தனர்.

மேலும் செந்துறை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக வந்து அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அப்போது தனது மகள் போல் அனிதாவை நினைத்து பெண்கள் பலர் கதறி அழுததை காண முடிந்தது. பின்னர் அஞ்சலி செலுத்திவிட்டு அவர்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். மாணவி உடலின் அருகே போலீசாரும் பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.

அப்போது தனது நண்பர்களுடன் வந்த திரைப்பட இயக்குனர் கவுதமன் திடீரென நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி கோஷமிட்டார். பின்னர் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை அனிதா உடலை எடுக்க விடமாட்டோம் என கூறி ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

மக்கள் அதிகாரம் மற்றும் திருச்சி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோஷமிட்டபடியே வந்து அனிதாவின் உடலுக்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவர்கள் ரத்து செய்... ரத்து செய்... நீட் தேர்வை ரத்து செய்... என மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அனிதாவின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்ட கிராமப்புற மாணவ, மாணவிகள், நீட் விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளின் மெத்தன போக்கே அனிதாவின் உயிரை பறித்து விட்டது, எனவே இந்த படுகொலை சம்பவத்தில் மத்திய-மாநில அரசுகள் தான் குற்றவாளி என்று எழுதிய விளம்பர பதாகைகளை கையில் பிடித்தபடியே ஆவேசமாக வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தின் அருகே நீட் தேர்வினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் மாணவ, மாணவிகள் கண்ணீர் மல்க அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இனிமேல் நீட் குழப்பத்தில் சிக்கியுள்ள மாணவர்களை அரசு தான் காப்பாற்ற வேண்டும். இனியும் உயிர்பலி ஏற்பட்டு விட கூடாது என அங்கு அமர்ந்திருந்த கிராம மக்களிடம் விளக்கி கூறினர். அப்போது மாணவர்களிடத்தில் கிளர்ச்சி ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் மாணவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

மாணவி அனிதா குன்னம் அருகே உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்திருந்தார். அந்த பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் சட்டையில் கருப்பு பட்டை அணிந்தபடி வந்து அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, இது போன்ற துயர முடிவு நீட் தேர்வு குழப்பத்தில் உள்ள வேறு தமிழக மாணவ, மாணவிகளுக்கு மீண்டும் வந்துவிடாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. (அம்மா) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், திருச்சி சிவா எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ராசா, அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் ராமஜெயவேல், அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பட இயக்குனர்கள் பா.ரஞ்சித், களஞ்சியம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட சினிமா துறையை சேர்ந்தவர்கள் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, ஆகியோர் மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அனிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த தெருவின் முன்புற பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு கூட்டமாக நின்றவர்களை பாதுகாப்பு கருதி உடனடியாக கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். மேலும் அஞ்சலி செலுத்த வருபவர்களின் நடவடிக்கைகளை போலீசார் வீடியோவில் பதிவு செய்தவாறே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருச்சி சரக டி.ஐ.ஜி. பவானீஸ்வரி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மேற்பார்வையில் போலீசார் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மாணவி அனிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் குழுமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கண்ணீர் அஞ்சலி பதாகைகளை வைத்திருந்தனர்.

மாணவி அனிதாவின் டாக்டர் கனவுக்கு எமனாக நீட் தேர்வு அமைந்துவிட்டதாகவும், எனவே நீட் தேர்வினால் வேறு தமிழக மாணவ, மாணவிகள் இனியும் பாதிக்கப்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவ-மாணவிகள் வலியுறுத்தினர். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் போக்கை கண்டித்தும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடத்த அரியலூர் மாவட்ட வணிகர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரியலூர் நகரில் பஸ்நிலையம், மார்க்கெட் தெரு, எம்.பி.கோவில் தெரு, காந்தி மார்க்கெட் தெரு, பெரியகடை தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் தா.பழூர், மீன்சுருட்டி, செந்துறை, ஆண்டிமடம், திருமானூர், கீழப்பழூர், ஆர்.எஸ்.மாத்தூர், வி.கைகாட்டி, விக்கிரமங்கலம், ஜெயங்கொண்டம் உள்பட 200-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் மாவட்டம் முழுவதும் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மருத்துவமனை மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும் பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமானோர் சென்றதால், செந்துறை செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் வேன், கார்களில் சென்று மாணவி அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story