திருவேற்காடு அருகே தலையில் கல்லைப்போட்டு டிரைவர் கொலை
திருவேற்காடு அருகே தலையில் கல்லைப்போட்டு டிரைவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
திருவண்ணாமலை மாவட்டம், விநாயகபுரம், சேத்பட்டை சேர்ந்தவர் அன்பு(வயது 34). டிரைவரான இவர், சென்னை திருவேற்காடு பகுதியில் தங்கி வேலை செய்து வந்தார்.
நேற்று காலை திருவேற்காடு அருகே உள்ள வேலப்பன்சாவடியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையோரம் நடைபாதையில் அன்பு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
அவரது தலை, கல்லைப்போட்டு நசுக்கப்பட்டு இருந்தது. யாரோ அவரது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து உள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், திருவேற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்து சென்ற போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவரான அன்பு, திருவேற்காடு பகுதியில் நடைபாதையோரம் தங்கி இருந்து டிரைவர் வேலை மட்டுமின்றி கிடைத்த வேலைகளை செய்து வந்து உள்ளார்.
இது குறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அன்பு எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.