வடசென்னையில் மாணவர்கள் பயிற்சி மையம் தொடக்கம் தமிழக அரசு தகவல்


வடசென்னையில் மாணவர்கள் பயிற்சி மையம் தொடக்கம் தமிழக அரசு தகவல்
x
தினத்தந்தி 3 Sept 2017 4:15 AM IST (Updated: 3 Sept 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுப் பணிகள், வங்கி வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் மாணவர்களுக்கான பயிற்சி மையம் இந்த ஆண்டு வடசென்னையில் தொடங்கப்பட உள்ளது.

சென்னை,

பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும் வகையில், பல்வேறு முன்னோடித் திட்டங்களை தமிழக அரசு கடந்த 6 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.

கடந்த சட்டசபை கூட்டத் தொடரில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் பயன் பெறும் வகையில், மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளில் வேலை வாய்ப்பு பெறும் வகையில் அரசின் சார்பில் பயிற்சி மையம் ஒன்று தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த பயிற்சி மையம் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடசென்னையில் இந்த ஆண்டு தொடங்க முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணையிட்டுள்ளார். இதற்கு அரசுக்கு நடப்பாண்டில் ஒரு கோடியே 53 லட்சம் ரூபாயும், அதன் பின்னர் ஆண்டு தோறும் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாயும் செலவு ஏற்படும்.

இப்பயிற்சி மையத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், அரசுப் பணியாளர் தேர்வு வாரியம், ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம், வங்கி ஊழியர்கள் தேர்வு நிறுவனம் போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை, திறமையாக எதிர்கொண்டு அவற்றில் தேர்ச்சி பெறும் வகையில், முறையான பயிற்சி அளிக்கப்படும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும், 500 மாணவர்கள் என்ற வீதத்தில், ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக பயிற்சி அளிக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் திறன் மேம்பட்டு வாழ்வாதாரம் சிறக்க வழிவகை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story