இளைஞர்கள், மாணவர்களுக்கு பாதிப்பு: நீல திமிங்கல விளையாட்டை தடை செய்ய சட்டம் முதல்–அமைச்சர் பேட்டி


இளைஞர்கள், மாணவர்களுக்கு பாதிப்பு: நீல திமிங்கல விளையாட்டை தடை செய்ய சட்டம் முதல்–அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2017 8:00 AM IST (Updated: 3 Sept 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

இளைஞர்கள், மாணவர்களை பாதித்துள்ள நீல திமிங்கல விளையாட்டை தடை செய்ய புதுவை மாநிலத்தில் சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்–அமைச்சர் கூறினார்.

புதுச்சேரி,

இளைஞர்கள், மாணவர்களை பாதித்துள்ள நீல திமிங்கல விளையாட்டை தடை செய்ய புதுவை மாநிலத்தில் சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நீல திமிங்கல விளையாட்டினால் மாணவர்கள், இளைஞர்கள் பலர் தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இது சமுதாயத்தில் பெரும் விளைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த விளையாட்டுக்கு காரணமானவர் ரஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் மதுரையை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நீல திமிங்கல விளையாட்டினால் தான் தற்கொலை செய்தாரா? அல்லது மன அழுத்தமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாராவது நீல திமிங்கல விளையாட்டை விளையாடுகிறார்களா? என சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த விளையாட்டை விளையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் உயிரை இந்த விளையாட்டிற்காக மாய்த்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

அதில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியே வரவேண்டும். உங்களின் வாழ்வு பாதுகாக்கப்படும். இல்லையெனில் மன அழுத்தத்திற்கு உள்ளாகி பல விபரீத விளைவுகள் ஏற்படும். மத்திய அரசும் இந்த விளையாட்டை தடுக்க கவனம் செலுத்தி வருகிறது. புதுச்சேரியில் நீல திமிங்கல விளையாட்டை தடை செய்ய தேவைப்பட்டால் சட்டம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் பிளஸ் 2–வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து நீட் தேர்வால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத மாணவி அனிதா தற்கொலை செய்துள்ளார். இது மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளித்துள்ளது. அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வில் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் குரல் கொடுத்தும் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி அதை ஏற்க மறுத்துவிட்டது. நல்ல மதிப்பெண் எடுத்த மாணவியை இழந்துவிட்டோம். அந்த மாணவிக்கு புதுச்சேரி மக்கள் மற்றும் அரசு சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

புதுச்சேரியில் நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் புதுச்சேரி மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துள்ளோம். மொழிவாரி, மதவாரி சிறுபான்மை கல்லூரிகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நீட் தேர்வில் விலக்கு கோரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரி தொடங்க உள்ளது. ராக்கிங்கில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி இதில் ஈடுபட்டால் மாணவர்கள் கல்லூரிகளில் இருந்து நீக்கம் செய்யப்படுவர்.

சென்டாக் மருத்துவ மேல்படிப்பு மாணவர் சேர்க்கை விவகாரத்தில் கவர்னரின் செயலாளர் யாரிடமும், எந்த அனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக கோர்ட்டில் மனு செய்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் தெரிவித்தோம். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் மீது எங்களுக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியோ, விரோதமோ கிடையாது. விதிமுறைகளை மீறியதால் புகார் செய்தோம். யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அமைச்சர் கமலக்கண்ணன் உடனிருந்தார்.

தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இந்த பண்டிகையை பயன்படுத்தி நோட் புக் போட்டு மாமூல் வசூல் வேட்டை நடப்பது வழக்கம். இதுவும் ஒரு லஞ்சம்தான். போலீசார், தீயணைப்பு துறையினர், அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் இத்தகைய வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். கடந்த ஆண்டு இதே போல் வசூல் வேட்டையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே கடந்த ஆண்டு இந்த வசூல் வேட்டை குறைந்திருந்தது. இந்த ஆண்டு யார் தீபாவளி மாமூல் வசூலிப்பதாக தகவல் கிடைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.


Next Story