நீட் தேர்வு பிரச்சினையில் மாணவி அனிதா தற்கொலை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல்


நீட் தேர்வு பிரச்சினையில் மாணவி அனிதா தற்கொலை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 3 Sept 2017 5:45 AM IST (Updated: 3 Sept 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வு பிரச்சினையில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கண்டமங்கலம்,

நீட் தேர்வு பிரச்சினையில் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துகள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த பிரச்சினையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டமங்கலத்தில் விழுப்புரம்–புதுச்சேரி மெயின் ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். கட்சியின் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆற்றலரசு தலைமை தாங்கினார். கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர்கள் செந்தில் முருகன், தமிழ்க்குடி, முருகவேல், மாநில நிர்வாகிகள் செம்மல், பழனிவேல் மற்றும் கட்சி தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியல் காரணமாக அந்த வழியாக நடைபெற்ற போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதாக 55 பேரை கண்டமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மோகனமுத்து தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த போராட்டம் காரணமாக கண்டமங்கலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அதேபோல் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அம்பேத்கர் சிலை முன்பு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு கட்சியின் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் அய்யா கரிகாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கலைமாறன், தமிழ் முகிலன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மறியல் செய்தனர். மறியலின்போது மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் கிளியனூர் மெயின்ரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட துணை செயலாளர் இரணியன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் அருள், அன்பரசு மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

மொரட்டாண்டியில் சுங்கச்சாவடி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர்கள் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பில் சாலை மறியல் போராடடம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெளியீட்டு மைய மாநில துணை செயலாளர் பொன்னி வளவன் தலைமை தாங்கினார். கட்சியின் நிர்வாகி பிரபுதாஸ், தொழிலாளர்கள் விடுதலை முன்னணி அமைப்பின் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மறியல் செய்தனர்.


Next Story