மாணவி அனிதா தற்கொலை எதிரொலி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்


மாணவி அனிதா தற்கொலை எதிரொலி: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 3 Sept 2017 9:00 AM IST (Updated: 3 Sept 2017 4:13 AM IST)
t-max-icont-min-icon

மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலம் மாவட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்பட அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமலூர்,

‘நீட்’ தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, தனது மருத்துவ கனவு தகர்ந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதையொட்டி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை முன்பு நேற்று மாலை சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாநகர அமைப்பாளர் சரவணன், துணை அமைப்பாளர்கள் இப்ராஹீம், ஜபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞரணியினர் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக மாணவி அனிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு திராவிட விடுதலை கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் டேவிட், மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மக்கள் ஜனநாயக குடியரசு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணன், மக்கள் தேச கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மணிவண்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓமலூர் பஸ்நிலையம் அம்பேத்கர் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் தமிழ் அமுதன், மாநில செயற்குழு உறுப்பினர் வீரமணி, ஒன்றிய செயலாளர்கள் வேல்பாண்டியன், மாதையன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து சித்தி விநாயகர் கோவில் மண்டபத்தில் தங்க வைத்தனர். சாலைமறியல் செய்தது தொடர்பாக மாவட்ட செயலாளர் வசந்த் தலைமையில் 51 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் ஓமலூர் பஸ்நிலையம் அம்பேத்கர் சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த முயற்சி நடந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து ஓமலூரில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். இதுதொடர்பாக 46 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அடுத்தடுத்து நடந்த போராட்டத்தால் ஓமலூரில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதாக கூறி மேட்டூர் பஸ்நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொறுப்பாளர் மெய்யழகன் தலைமை தாங்கினார். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் சிவா, மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாணவி அனிதா தற்கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் அய்யாவு தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

Next Story