மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை திரளானவர்கள் கலந்து கொண்டனர்


மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை திரளானவர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 3 Sept 2017 4:59 AM IST (Updated: 3 Sept 2017 4:59 AM IST)
t-max-icont-min-icon

மேலப்பாளையத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை,

பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மேலப்பாளையத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்த தொழுகையில் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ. மற்றும் முஸ்லிம் ஆண்கள், பெண்கள் திரளானோர் கலந்து கொண்டனர். மேலப்பாளையம் பஜார் திடலில் நடந்த தொழுகையில் த.மு.மு.க. மாநில துணைத்தலைவர் ரிபாயி ரஷாதி தொழுகையை நடத்தி பேசினார். இதில் நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் உஸ்மான்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மறுமலர்ச்சி த.மு.மு.க. சார்பில் அலங்கார் தியேட்டர் வளாகத்தில் நடந்த தொழுகையை ஹாமீம் நடத்தினார். மறுமலர்ச்சி த.மு.மு.க. மாநில பொதுச்செயலாளர் ரசூல் மைதீன், பொருளாளர் ஆலியப்பா மற்றும் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

மேலப்பாளையம் கரீம்நகரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது, மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஏராளமானவர்கள் தொழுகையில் கலந்து கொண்டனர். மியான்மரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை ஐ.நா.சபையும், மத்திய அரசும் தடுத்து நிறுத்த வேண்டும். மியான்மர் உடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில துணைத்தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சாஹித் உஸ்மான், செயலாளர் ஹயாத், பொதுச் செயலாளர் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் பாளையங்கோட்டை, பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் நடந்த தொழுகையில் மியான்மர் சம்பவத்தை கண்டித்து பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மேலப்பாளையம் மண்டல அலுவலகம் அருகில் உள்ள ஈத்கா திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண், பெண்கள் மற்றும் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு அமைப்புகள் சார்பிலும் தொழுகை முடிந்த பிறகு ஆடு, மாடுகள் ஏழைகளுக்கு குர்பானியாக வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி ஈத்கா மைதானத்தில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையை இமாம் ராஜாமுகம்மது நடத்தினார். இதில் ஜமாத் தலைவர் கே.பி.எஸ். முகம்மது ஹூசைன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story