சரித்திர ரகசியங்களைத் தேடி...


சரித்திர ரகசியங்களைத் தேடி...
x
தினத்தந்தி 3 Sept 2017 5:30 PM IST (Updated: 3 Sept 2017 12:54 PM IST)
t-max-icont-min-icon

தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான முனைவர் பீனா தாமஸ் தரகன், திருவனந்தபுரம் நகரத்தின் வரலாற்றை தேடி அறிந்து வெளிச்சம்போட்டு காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான முனைவர் பீனா தாமஸ் தரகன், திருவனந்தபுரம் நகரத்தின் வரலாற்றை தேடி அறிந்து வெளிச்சம் போட்டு காட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் ஆர்வ முள்ளவர்களை ஒருங்கிணைத்து ‘ஹெரிட்டேஜ் வாக்’ என்ற குழுவையும் உருவாக்கி வழிநடத்துகிறார். ஒவ்வொரு வாரமும் இந்த குழுவினர் செல்ல இருக்கும் இடம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது. அதை தெரிந்து கொண்டு குழுவினர் ஒன்று சேருகிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, அந்த பகுதியின் சரித்திர சிறப்புகளை கண்டறிந்து, வெளிப்படுத்துகிறார்கள். இந்த குழுவின் பயணத்தில் 20 முதல் 30 பேர் வரை இடம்பெறுகிறார்கள். அதில் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள் உள்பட ஆர்வமுள்ள பலர் பங்கு பெறுகிறார்கள். “வரலாற்று சிறப்புகளை கண்டறிந்து, இளந்தலைமுறையினருக்கு உணர்த்துவது எங்களது பணி” என்கிறார், பீனா.

இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் பரோடாவில். இவரது கணவர் ஜான் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். பீனா, கல்லூரியில் தொல்லியல் துறை கல்வியினை பயின்று, பின்பு புனே பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. ஆய்வுகளை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.

“சிறு வயதிலே எனக்கு கதைகளை கேட்பதில் அதிக ஆர்வம் உண்டு. விவரம் தெரிய ஆரம்பித்த பின்பு, அந்த கதைகள் நடந்ததாக கூறப்படும் இடங்களைத் தேடிச்செல்லத் தொடங்கினேன். படித்து முடித்த பின்பு எனக்கு தொல்லியல் துறையில் ‘ஸ்பெஷல் ஆபீசர்’ பணி கிடைத்தது. அது எனது ஆர்வத்திற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்தது. நான் எந்த ஊருக்கு சென்றாலும் முதலில் அந்த ஊரின் வரலாற்றுப் பின்னணியைத்தான் ஆராய்வேன். அதுவே என் வேலையாகவும் ஆகிவிட்டது.

யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சிறப்பிற்குரிய இடங்களின் பட்டியலுக்கு கேரளாவில் பத்மனாபபுரம் அரண்மனையையும், எடக்கல் குகையையும் தேர்வு செய்தார்கள். அந்த பட்டியலில் இடம் பெறவேண்டுமானால், இடம்பெற தகுதியுள்ள ஊரின் வரலாற்று பின்னணி தெளிவாக விளக்கப்படவேண்டும். ஆதாரங்களை கொடுத்து, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும். அது தொடர்புடைய பணியின் போதுதான் எனக்கு திருவனந்தபுரத்தின் சிறப்புகளை அறிய அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அது மூடிவைக்க வேண்டிய விஷயம் அல்ல. எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியது என்பதே ‘ஹெரிட்டேஜ் வாக்’ என்ற அமைப்பை உருவாக்க தூண்டுதலாக இருந்தது.

திருவனந்தபுரத்தில் புராணகாலம் முதல் பத்மநாப சுவாமி ஆலயம் மட்டுமே சிறப்பு பெற்றதாக இருந்தது. அனுஷம் திருநாள் மார்த்தாண்டவர்மா, பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு தலைநகரை மாற்ற முக்கிய காரணமாகவும் அந்த ஆலயம்தான் இருந்தது. பின்பு மிகப்பெரிய மாற்றங்கள் அங்கே உருவாகின. ராஜகம்பீரம் பொருந்திய அரண்மனைகள் உருவாகின. கட்டிடங்கள் கட்டப்பட்டன. திருப்படிதானத்தோடு மன்னர் குடும்பமும், மக்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள். இதுதான் திருவனந்தபுரத்தின் சரித்திர குறிப்பு. இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒவ்வொரு ஊருக்கும் சரித்திர பின்னணி இருக்கிறது. அதை நாம் ஆதாரங்களோடு அறியும்போது வியந்துபோவோம்” என்று கூறும் முனைவர் பீனா, திருவனந்தபுரத்தில் அன்றும், இன்றும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் விளக்கினார்.

“முதலில் அங்கு மருத்துவமனைகள், பள்ளிகள், கட்டிடங்கள் போன்றவைகளின் கூரைகளை ஓலையால்தான் வேய்ந்திருக்கிறார்கள். பின்பு மன்னர் அந்த கட்டிடங்களுக்கு ஓடு வேயும்படி உத்தரவிட்டிருக்கிறார். 150 ஆண்டுகளுக்கு முன்புதான் ஓடுகள் வேயப்பட்டிருக்கின்றன. சரித்திர புகழ் வாய்ந்த கட்டிடங்கள் வெயில், மழையால் பாதிக்கப்படுகின்றன. மீதமுள்ளவைகளை காப்பாற்றவேண்டும் என்றால் மக்களுக்கு அதன் சிறப்புகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அதுதான் எனது நோக்கம்..” என்கிறார், முனைவர் பீனா. 

Next Story