திறமையால் வென்ற திருநங்கைகள்


திறமையால் வென்ற திருநங்கைகள்
x
தினத்தந்தி 3 Sept 2017 6:30 PM IST (Updated: 3 Sept 2017 3:38 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அளவிலான சிறந்த திருநங்கைகளை தேர்ந்தெடுக்க ‘மிஸ் டிரான்ஸ்குயின் இந்தியா’ என்ற அழகிப் போட்டி நடத்தப் படுகிறது.

ந்திய அளவிலான சிறந்த திருநங்கைகளை தேர்ந்தெடுக்க ‘மிஸ் டிரான்ஸ்குயின் இந்தியா’ என்ற அழகிப் போட்டி நடத்தப் படுகிறது. இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான அழகான திருநங்கைகள் அதில் இடம்பெற்று தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். இந்த ஆண்டுக்கான போட்டி சில நாட்களுக்கு முன்பு அரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் நடந்தது. பல சுற்று களாக பிரமாண்டமாக நடந்த அந்த போட்டியில் சென்னையை சேர்ந்த பிரபலமான திருநங்கைகளும் கலந்துகொண்டார்கள். முதலிடத்தை கொல்கத்தாவை சேர்ந்த நிதாஷாவும், இரண்டாம் இடத்தை மணிப்பூரை சேர்ந்த லொய்லொய்யும், மூன்றாம் இடத்தை சென்னையை சேர்ந்த ரகசியாவும் பிடித்தனர்.

இந்த வெற்றி மூலம் 24 வயதான ரகசியா, அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் திருநங்கைகளுக்கான ‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார்.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் அவர், அழகுப் போட்டி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

“பிரபலமான இந்த போட்டிக்கான முதல் கட்ட தேர்வு சென்னையில் நடந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றோம். அவர்களில் இருந்து நான், நமீதா, தீட்சிகா ஆகிய மூன்றுபேர் தமிழ்நாட்டில் இருந்து போட்டியில் பங்கேற்க தேர்வானோம். எங்களை போல மணிப்பூர், ஆந்திரா, கர்நாடகா, சிக்கிம், மேற்குவங்காளம், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்பட பிற மாநிலங்களில் இருந்தும் தலா மூன்று பேர் பங்கேற்றனர். பல்வேறு போட்டிகள் மூலம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் தனித்திறமைகளை பரிசோதித்தார்கள். குணாதிசயங்கள், நடை, உடை, பாவனை, செயல் திறன், பேச்சாற்றல் போன்றவைகளை எல்லாம் மதிப்பீடு செய்தனர். ஒவ்வொரு சுற்றிலும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கேள்வி-பதில் சுற்றில், ‘நீங்கள் திருநங்கைகள் மத்தியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை முன்வைத்தார்கள். அதற்கு நான், ‘திருநங்கைகள் என்றாலே பிறரை சார்ந்திருப்பவர்கள், கையேந்தும் தொழில் செய்து தொந்தரவு செய்பவர்கள் என்ற எண்ணம்தான் பெரும்பாலான மக்கள் மனதில் இருக்கிறது. அந்த நிலையை களைய பாடுபடுவேன். திருநங்கைகளாலும் சாதிக்க முடியும். ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமை இருக்கிறது. அதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தால் எல்லா துறைகளிலும் சாதிக்க முடியும்’ என்று கூறினேன். அது பாராட்டைப் பெற்றுத்தந்தது” என்கிறார்.

ரகசியா நீச்சல் உடை சுற்றில் பங்கேற்க தயங்கியிருக்கிறார். ஆனால் அந்த சுற்றுதான் அவருக்கு ‘சிறந்த உடல்வாகுகொண்டவர்’ என்ற பட்டத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது.



“கூட்டத்துக்கு மத்தியில் நீச்சல் உடையை அணிந்து ‘போஸ்’ கொடுக்க தயக்கமாக இருந்தது. ஆனாலும் பங்குபெற்றேன். அந்த சுற்றில் பேச்சு, புன்னகை, சிகை அலங்காரம், நக பராமரிப்பு, உடல்வாகு உள்ளிட்டவைகளுக்கும் மதிப்பெண் வழங்கினார்கள். அதிலும் எனக்கு வெற்றி கிடைத்தது. இந்த போட்டியில் வெல்லவேண்டும் என்பதற்காக 8 மாதங்களுக்கு முன்பாகவே என்னை தயார் படுத்திக்கொள்ள தொடங்கி விட்டேன். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்தேன். நடன வகுப்புக்கு சென்றேன். உணவுப்பழக்கவழக்கத்திலும் கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டேன். லெமன் டீ, சப்பாத்தி, வேக வைத்த காய்கறி கள், பழவகைகளை சாப்பிட்டேன். இப்போதும் அதையே தொடர்கிறேன். ஆஸ்திரேலியாவில் நடக்கும் எங்களுக்கான உலக அழகிப்போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக இன்னும் உடல் எடையை குறைத்து கச்சிதமான உடல்வாகுடன் தோன்ற வேண்டும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்” என்றார்.

இந்த போட்டியில் வெல்வதற்கு ரகசியா ஆடையிலும் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார். தாய்லாந்து சென்று உடை வாங்கி வந்து தங்க தேவதைபோல் அலங்காரத்தில் ஜொலித்திருக்கிறார்.

“நான் தாய்லாந்திற்கு சென்றிருந்தபோது, தங்க நிறத்தில் வேலைப்பாடுகள் நிறைந்த கவுனை வாங்கி வந்தேன். அதை அணிந்துகொண்டு போட்டியில் பங்கேற்றேன். அதுவும் நான் பட்டம் வெல்வதற்கு காரணமாக அமைந்தது” என்கிற ரகசியா, தமிழ் கலாசாரத்தையும் மறக்காமல் புடவை யிலும் பேரழகுடன் மேடையில் உலா வந்திருக்கிறார்.

“தனித்திறமையை நிரூபிக்கும் சுற்றில் தமிழகத்தின் பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தை தேர்ந்தெடுத்தேன். நான் சிறுவயதில் முறைப்படி பரதநாட்டியம் கற்று தேர்ந் திருந்ததால் நேர்த்தியாக ஆடினேன். காஞ்சீபுர பட்டு சேலை அணிந்து திருமண கோலத்தில் மணப்பெண்ணாகவும் தோன்றினேன். அது பார்வையாளர் களின் கவனத்தை ஈர்த்ததோடு எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது” என்று மனம் நெகிழ் கிறார்.

குர்கானில் இறுதிப்போட்டி 9 நாட்கள் நடந்தேறி இருக்கிறது. முதல் ஐந்து நாட்களில் நடைபெற்ற சுற்றுகளில் இருந்து 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக் கிறார்கள். அதில் ரகசியாவும், நமீதாவும் இடம்பிடித்திருக் கிறார்கள். அடுத்தகட்ட சுற்றுகளில் முதல் ஐந்து இடங்களுக் குள் ரகசியா முன்னேறி வெற்றி பெற்று, மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். அவருக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் ஓட்டு அளித்திருக்கிறார்கள்.

“இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு மக்களின் ஓட்டளிப்பும் முக்கிய பங்கு வகித்தது. சமூகவலைத்தளங்கள் மூலம் மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்ததில் எனக்கு 4 லட்சத்து 70 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. அதற்கு என் நண்பர்கள் உதவிகரமாக இருந்தார்கள். சகோதரன் அமைப்பின் சுனில்மேனனும் எங்கள் நன்றிக்குரியவர். நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதிலும் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. என்னிடம், ‘நீங்கள் மாற்றிக்கொள்ள ஆசைப்படும் விஷயம் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு ‘நான் சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறியதால் படிப்பை இழந்து விட்டேன். இன்றைய காலகட்டத்தில் கல்வி மிக முக்கியம். மாடலிங், சினிமா துறையில் நுழைந்த பிறகுதான் நான் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். நான் தொடர்ந்து நிறைய படித்திருக்கவேண்டும்’ என்றேன்.



அடுத்த போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்வதற்கும், சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கும் வசதியாக ஆங்கிலம் கற்றுவருகிறேன். திருநங்கைகள் மாடலிங் துறையிலும், பேஷன் உலகிலும் அடியெடுத்து வைக்க வேண்டும். தன்னை சிறந்த அழகியாக நினைத்துக் கொண்டு தைரியமாக அவர்கள் மேடை ஏற வேண்டும். அவர்களுக்குரிய உரிமைகளும், அங்கீகாரங்களும் நிச்சயம் கிடைக்கும். திருநங்கைகள் தங்களுக்கு பிடித்த மானவர்களை சட்ட ரீதியாக திருமணம் செய்து கொள்வதற்கான அங்கீகாரமும் கிடைக்க வேண்டும். எங்களுக்கு எல்லா வகை அதிகாரங்களும் கிடைக்க சமூகம் ஒத்துழைக்க வேண்டும்” என்கிறார்.

இந்த போட்டியில் ரகசியாவுடன் பங்கேற்றவர்களில் ஒருவரான நமீதா பல்வேறு விதங்களில் தன்னுடைய அழகையும், திறமையையும் நிரூபித்து ‘கனவுக்கன்னி’, ‘புன்னகை அரசி’ போன்ற பட்டங்களை வென்றிருக்கிறார்.

நமீதா சொல்கிறார்:


“எல்லா சுற்றிலும் என் திறமையை காட்டினேன். அதற்கேற்ப பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றேன். என்னை விட மற்ற போட்டியாளர்கள் ஆடை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தியிருந்தனர். அவர்களுடன் ஒப்பிடுகையில் ஆடை அலங்காரத்தில் நான் பின்தங்கி விட்டதை உணர்ந்தேன். ஆனால் பார்வையாளர்களை கவரும் விதத்தில் எனது புன்னகை அமைந்து, வெற்றியை பெற்றுத்தந்தது. கனவுக்கன்னி என்ற பட்டம் என்னை பெருமைகொள்ளவைக்கிறது. சக போட்டியாளர்களே என்னை பார்த்து சில்க் சுமிதா போல் வசீகரமாக இருப்பதாக கூறினார்கள். அடுத்து நான் தாய்லாந்தில் நடக்கும் சர்வதேச போட்டியில் பங்கேற்க போகிறேன். நான் ஏற்கனவே மிஸ் சென்னை, மிஸ் கூவாகம், மிஸ் புதுச்சேரி ஆகிய பட்டங்களை வென்றிருக்கிறேன். அடுத்தமுறை ‘மிஸ் டிரான்ஸ்குயின் இந்தியா’ பட்டத்தை வென்று விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்கிறார். மற்றொருவரான தீட்சிகாவும் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் தனித்திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றிருக்கிறார். 

Next Story