குளித்தலை, கரூரில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
குளித்தலை, கரூரில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலை,
‘நீட்’ தேர்வுக்கு எதிராக போராடிய அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதற்கு காரணமானவர்களை கைது செய்யவேண்டும். தமிழகத்தில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் குளித்தலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குளித்தலை காந்திசிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மணிவேந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் சரத்குமார் வரவேற்றார்.
சட்டமன்ற தொகுதி செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தார். கோரிக்கைகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன், மாநில விவசாய அணி துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அறிவழகன், மாவட்ட பொருளாளர் அவினாசி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மகாமுனி, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலையால் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும் கரூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் கரூர் பஸ் நிலையம் அருகே ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ரகு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நிர்மல் கோரிக்கை தொடர்பாக பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.