இன்று திருவோணத் திருநாள்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து
ஓணம் திருநாள் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
நாகர்கோவில்,
ஓணம் திருநாள் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–
அசுரவம்சத்தில் பிறந்திருந்தாலும் கொடை குணத்தால் நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்ற மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அழித்து அவன் புகழை மேலும் மெருகூட்டிட திருமால் வாமனனாக அவதரித்து 3 அடி மண் கேட்க, அதற்கு மகாபலி சக்கரவர்த்தி கர்வத்துடன் இசைவளித்தவுடன் திருமால் விஸ்வரூபம் கொண்டு முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்து மூன்றாம் அடிக்கு மகாபலி சக்கரவர்த்தி தலையில் கால் வைத்தபோது, மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு வரம் தரவேண்டும் என்று கோரினார். அதை ஏற்று திருமால் அருள் புரிந்தார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவோணத்தன்று மக்களைக் காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் தினமாக ஓணம் திருநாள் மக்களால் கொண்டாடப்படுகிறது. அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், கொடை, பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதை ஓணம் திருநாள் மனித சமுதாயத்துக்கு உணர்த்துகிறது. திருவோணத் திருநாளான இந்நன்னாளில் தேசிய சிந்தனை தழைத்து ஓங்கவும், அனைத்து சகோதர– சகோதரிகளும் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழவும் இந்த ஓணம் பண்டிகை வழிகாட்டட்டும். எனது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.