குளச்சல் அருகே கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பலி
குளச்சல் அருகே கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
குளச்சல்,
மண்டைக்காடு அருகே உள்ள கோட்டவிளையை சேர்ந்தவர் அனில்குமார் (வயது43), தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இவர் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில், குளச்சல் அருகே கொட்டில்பாடு நவஜீவன் காலனியில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் உள்ள தண்ணீரில் ஒருவர் பிணமாக கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதுகுறித்து குளச்சல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்து கிடந்தவர் அனில்குமார் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் கால்வாயில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் எனத்தெரிகிறது.
இதையடுத்து, பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.