உடுமலை அருகே பஸ்–வேன் மோதி பெண் உள்பட 3 பேர் பலி 33 பேர் படுகாயம்
உடுமலை அருகே பஸ்–வேன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடுமலை,
தமிழகத்தின் திண்டுக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களை சேர்ந்த பல தொழிலாளர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக தங்கி பல்வேறு கூலி வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு சென்று வருவது வழக்கம்.
அதன்படி, தற்போது கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டதால், அங்கிருந்த தமிழக தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பல்வேறு இடங்களில் இருந்த சுமார் 60 தொழிலாளர்கள் நேற்று முன்தினம் எர்ணாகுளம் வந்து, அங்கிருந்து ஒரு பஸ் மூலம் தமிழகம்–கேரள எல்லை பகுதியான கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தாபுரத்துக்கு வந்தனர். பின்னர் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அங்கிருந்து 2 வேன்களில் அவர்கள் திண்டுக்கலுக்கு புறப்பட்டனர்.
அதில் ஒரு வேன் காலை 5 மணி அளவில் உடுமலை– பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக மார்த்தாண்டத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற குளிர்சாதன வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ்சும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. அப்போது வேனில் பயணம் செய்த தொழிலாளர்கள் ‘அய்யோ‘, ‘அம்மா‘ என்று கூச்சலிட்டனர்.
மோதிய வேகத்தில் பஸ் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. வேனின் மேல்பகுதி உடைந்து, தொங்கியது. இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், உடுமலை போலீஸ்நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல்கொடுத்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் மற்றும் போலீசார், தீயணைப்பு நிலைய அதிகாரி நாகராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள், பொதுமக்கள் உதவியுடன், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்தில், திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா டி.குரும்பபட்டியை சேர்ந்த ரங்கராஜ்(வயது 40) இடிபாடுகளுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா டி.இடையபட்டியை சேர்ந்த கருப்புசாமியின் மனைவி காமாட்சி(38) சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி அருகில் உள்ள எல்லப்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் ஜீவானந்தம்(33) சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும் பஸ் டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த பலராமன் (49) மற்றும் வேனில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் பாடியூரை சேர்ந்த சுப்பிரமணி(42), வேடசந்தூர் சாதம்பட்டியை சேர்ந்த ராமசாமி(60), ராமசாமியின் மகன் காளீஸ்வரன் (39), காசிப்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார்(34), முத்துக்குமாரின் மனைவி சாந்தி(22) மற்றும் சவுந்திரபாண்டியன்(24), குளத்தூரை சேர்ந்த பாப்பாத்தி(40), கோம்பையை சேர்ந்த நல்லுசாமி(57), திண்டுக்கல் பழனிசாமி நகரை சேர்ந்த சண்முகம்(45), சண்முகத்தின் மனைவி பாண்டீஸ்வரி(37), வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த செந்தாமணி(34), நிலக்கோட்டையை சேர்ந்த திருப்பதி(36), சவுடமுத்து(30), வடமதுரையை சேர்ந்த முருகேசன்(55), குமார்(27), ராஜ்குமார்(26), மாரி(46).
திருச்சி மாவட்டம் மணப்பாறை குரும்பட்டியை சேர்ந்த சுப்புலட்சுமி(45), கனகராஜ்(37), முத்துலட்சுமி(40), சக்திவேல்(38), சக்திவேலின் மனைவி கலைசெல்வி(38), வையம்பட்டியை சேர்ந்த பழனிசாமி(45), புதுக்கோட்டை கே.புதூரை சேர்ந்த பிரபாகரன்(42), அருண்குமார்(20), முருகன்(38), கல்லுபட்டியை சேர்ந்த ரங்கநாதன்(27), தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தை சேர்ந்த ராமசாமியின் மகன்கள் மணி(57), பஞ்சவர்ணம்(46), தூத்துக்குடி மாவட்டம் கருங்குளத்தை சேர்ந்த முத்தன்(28). புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா பாறைபட்டியை சேர்ந்த காளிமுத்து(46), அவருடைய மனைவி மாரியம்மாள்(40) ஆகிய 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதில் ராஜ்குமார், ரங்கநாதன், மணி, பஞ்சவர்ணம், முத்தன், மாரியம்மாள், காளிமுத்து, மாரி ஆகிய 8 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மற்றவர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகளாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர். அவர்கள் அனைவரும் மாற்று பஸ்சில் கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு உமா நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் வேன் டிரைவர் ஜீவானந்தம் தூக்க கலக்கத்தில் வேனை ஓட்டி வந்து, பஸ் மீது மோதியது தெரியவந்தது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வேன், பஸ்சின் இடிபாடுகள் அங்கிருந்து அகற்றப்பட்டு, போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. அத்துடன் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து குறித்து, வேன் டிரைவர் ஜீவானந்தம் மீது உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ்– வேன் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.